ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெரூசலம் நகரில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலின் பாப் அல்-ரஹ்மா நுழைவாயிலை மூடி வைத்திருக்கும் காலத்தினை நீடித்து இஸ்ரேலிய நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பில் உலகின் முன்னணி இஸ்லாமிய அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
அல்-அக்ஸா பள்ளிவாசல் தொகுதியினுள் அமைந்துள்ள பள்ளிவாசல் கட்டடங்களின் நுழைவாயில்களுள் ஒன்றான பாப் அல்-ரஹ்மா நுழைவாயிலை மூடி வைத்திருப்பது தொடர்பில் தடையினைப் புதுப்பிப்பது சம்பந்தமாக இஸ்ரேலிய சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஜெரூசலம் நீதிவான் நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக்கொண்டது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையற்றதும் சட்டவிரோதமானதாகுமென கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பு சர்வதேச சட்டம், மனிதாபிமான சட்டம் மற்றும் ஜெனிவா பிரகடனம் ஆகியவற்றை மீறுகின்ற ஒன்றாகுமென ஜித்தாவைத் தளமாகக் கொண்ட அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன தேசத்தின் தலைநகரான கிழக்கு ஜெரூசலம் (அல்-குத்ஸ்) 1967 ஆம் ஆண்டு இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலப் பிரதேசத்தின் பகுதியாகும். இது இஸ்ரேலின் நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதியல்ல என தெரிவித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு இஸ்ரேலின் அந்த நடவடிக்கை நிராகரிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.
பாப் அல்-றஹ்மா பள்ளிவாசல் அல்லது அல்-றஹ்மா நுழைவாயில் என அழைக்கப்படும் அப் பகுதி 2003, 2017 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலிய நீதிமன்றமொன்றினால் மூடுவற்கான தடை நீடிக்கப்பட்டதன் அடிப்படையில் மூடப்பட்டது.
அல்-அக்ஸா வளாகத்தை மேற்பார்வை செய்வதற்காக ஜோர்தானினால் நியமிக்கப்பட்ட குழுவான இஸ்லாமிய வக்ப் சபை கடந்த 16 வருடங்களாக இஸ்ரேல் விதித்துள்ள தடையினையும் மீறி புனிதத் தலத்தினுள் அமைந்துள்ள பாப் அல்-றஹ்மா கட்டடத்தினை தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்களுக்காக திறந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.