சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அசாத்தியம்
ஐ.நா. மனித உரிமை அலுவலகமும் வேண்டாம்; ஜெனிவாவில் அரசாங்கம் திட்டவட்டம்
இலங்கை பிரஜைகள் அல்லாத வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையின் வழக்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாயின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவேண்டும். அந்த அரசியலமைப்பு திருத்தமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுடன் அதுதொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அது கடினமானது. எனவே இலங்கையானது உள்ளகப் பொறிமுறையில் இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அலுவலகம் அமைக்கப்படுவது அவசியமற்றது என்றே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. அதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
2017 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் பாரிய முன்னேற்றங்களை வெளிக்காட்டியிருக்கின்றது. ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நன்றி கூறுகின்றோம். நாம் பரந்துபட்ட ரீதியில் மனித உரிமை பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புகின்றோம். நாம் ஏற்படுத்தும் முன்னேற்றங்கள் தொடர்பில் இந்தப் பேரவைக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம். போருக்குப் பின்னரான மீளக்கட்டியெழுப்புதல் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமானதாகும். நாம் ஏனைய நாடுகளிடமிருந்து பாடம் கற்கலாம். ஆனால் எமது உள்நாட்டு செயற்பாடே நாம் நல்லிணக்கத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
உண்மையைக் கண்டறியும் செயற்பாட்டில் நாம் காணாமல் போனோர் அலுவலகத்தை நியமித்துள்ளோம். அதன் தொழில்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன. எமது அமைச்சர்கள் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வர பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இழப்பீடு வழங்கும் அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மிகக்குறுகிய காலத்தில் இந்த சட்டங்கள் முன்னெடுக்கப்படுகி்ன்றன. 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இலங்கை உயர் நீதிமன்றம் முக்கிய வகிபாகத்தை வகித்தது. அதன்மூலம் சுயாதீன நீதித்துறை உறுதிப்படுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு படைத்தரப்பினர் மற்றும் பொலிஸாரினால் முன்னுதாரணமான வகையில் முன்னெடுக்கப்பட்டன. இழப்பீடு அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ள வகையில் அதற்கு மூன்று ஆணையாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனது பிரஜைகளுக்கு அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்துகின்றது. இந்தப் பேரவையின் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பான தவறான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 63257 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதாவது 88.87 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவம் வைத்திருந்த தனியார் காணிகளில் 26 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்படுகின்றது. மேலும் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியும் துரித நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதி செயலணியும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி செயலணியில் அனைத்துத் துறைசார் நிபுணர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி இலங்கையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அலுவலகம் அமைக்கப்படுவது அவசியமற்றது என்றே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது. அதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை பேரவையின் நிபுணத்துவ ஒத்துழைப்பை வரவேற்கின்றோம். குறிப்பாக தொழில்நுட்ப உதவிகளை வரவேற்கின்றோம். நாம் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளருடனும் ஐ.நா.மனித உரிமை பொறிமுறையுடனும் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.
-Vidivelli