திகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….
திகன வன்முறைகள் நிகழ்ந்து ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் ராஜித ஜாகொட ஆராச்சி எழுதிய கட்டுரையை தமிழில் தருகிறோம்.
ஒரு வருடத்திற்கு முன்னர் யாராலும் அடையாளம் காணப்படாத ஒரு அமைதியான கிராமமாக திகன இருந்தது. பின்னர் அந்தக்கிராமம் வன்முறைகளுக்கும் வெறுப்புப் பேச்சுக்கும் ஏற்ற இடமாக மாறிப் போனது. அவ்வாறு வன்முறையால் பாதிக்கப்பட்ட திகனையைச் சேர்ந்த ஸம்ஸுதீனுடைய வீடு இன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. கலவரத்தினால் சேதமான முஸ்லிம்களுடைய வீடுகள் மற்றும் வியாபாரத் தலங்கள் மீள் நிர்மாணம் செய்யப்பட்டும் வருகின்றன.
பாதணி தயாரிப்பாளரான ஸம்ஸுதீன் திகன பிரதேசத்தின் மத்தியிலுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தனது வீட்டில் வசித்து வருகிறார். 60 வயதான அவர் எங்களை அவரது அறைக்கு அழைத்து வரவேற்றதோடு தேநீர் உபசாரம் செய்யுமாறு தனது மனைவிக்கு சைகை மூலம் காட்டினார்.
கண்டியின் திகனயில் இடம்பெற்ற இனவாத வன்முறையினால் ஸம்ஸுதீனுடைய வீடு மற்றும் கடை என்பன தீயினால் எரிக்கப்பட்டன. இதன்போது அவருடைய இளைய மகன் அப்துல் பாஸித் உயிரிழந்தார்.
ஸம்ஸுதீன், அவரது மகனின் இழப்பினால் கடுமையான அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து நிலைகுலைந்து போயுள்ளார்.
“எங்களுடைய ஊரில் சமயங்களுக்கிடையில் எந்த ஒரு பிரிவினையும் இருந்ததேயில்லை. என்னுடைய இளையமகன் பாஸித்துக்குக் கூட எல்லா இனத்திலும், எல்லா மதத்திலும் நண்பர்கள் இருந்தார்கள். நாங்கள் சிங்கள மக்களுடன் பல வருடங்களாக அமைதியாகவே வாழ்ந்தோம். நடந்த விடயங்களை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. எல்லாமே ஒரு கனவு போல இருக்கிறது” என ஸம்ஸுதீன் கூறுகிறார்.
ஸம்ஸுதீன், தனது ஒன்பதாவது வயதில் இருந்தே பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வந்ததாகவும், வாழ்கையில் ஏற்ப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின்னர் திகனயில் சொந்த வியாபாரத்தளம் ஒன்றை உருவாக்கியதாகத் தெரிவித்தார். “நான் சிறு வயதிலிருந்தே கடுமையாக உழைத்தேன். பின்னர் எனது சேமிப்பை வைத்து இந்த வீட்டில் எனது தொழிலை தொடங்கினேன்” என்றார்.
அது 2018 மார்ச் ஐந்தாம் திகதி. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் 4 முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிங்களவரைத் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறைகள் தொடங்கின. முஸ்லிம்களுடைய உடைமைகளை அழிக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.
“எனது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டு பற்றி எரிந்தபோது நானும் எனது மனைவியும் வீட்டிலிருந்து வேகமாக பாய்ந்து வெளியேறி விட்டோம். பாஸித் மேல் தளத்தில் இருந்ததால் அவனால் உடனடியாக வெளியேற முடியவில்லை” என பாஸித்துடைய தந்தை ஸம்ஸுதீன் நினைவுபடுத்துகிறார்.
ஸம்ஸுதீனுடைய இரண்டாவது மகன் பயாஸ் வீட்டின் கூரைக்கு ஏறி பாஸித்தை தேட முயன்ற போது கூரையோடு சேர்த்து கீழே விழுந்துவிட்டார். பின்னர் அவருக்கு வேறு வழி இல்லாததால் வீட்டிலிருந்து வெளியேறித் தப்பினார். எனினும் அவரது உடம்பில் தீ பற்றிக் கொண்டது. “நெருப்பினால் எரிந்து கொண்டிருந்த எனது மகனைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள். யாரும் அவரை தீயில் இருந்து விடுவிக்க வரவில்லை. இருந்தாலும் பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். வைத்தியசாலையில் 2 பேரை அனுமதித்துள்ளதாக பொலிஸார் சொன்னார்கள். அதில் பாஸித்தும் ஒருவராக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அடுத்த நாள் அவரது ஜனாஸாதான் கிடைத்தது” என்று கூறியவாறே நிரம்பி வழிந்த கண்ணீரை தனது இரு கைகளாலும் துடைக்கிறார் தந்தை ஸம்ஸுதீன். தன்னை அறியாமலே அவரது ஊன்றுகோல் தரையில் விழுந்தது.
“பிரேத பரிசோதனை அறிக்கையில் பாஸித் மார்ச் 4 ஆம் திகதி இறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மார்ச் 4 இல் எமது வீட்டில் எதுவும் நடக்கவில்லை. எல்லாம் மார்ச் 5 இல் தான் நடந்தது. நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இப்போது வேறு யாரோ ஒருவருடைய வீட்டில் இருப்பது போலவே தோன்றுகிறது” என்று கூறியவாறே வீட்டின் புதிய சுவர்களை பார்க்கிறார்.
திகனயில் ஏற்பட்ட கலவரத்தினால் ஸம்ஸுதீன் சுமார் 3 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை இழந்துள்ளார். தனது வீடு மற்றும் கடையின் பெறுமதியே இதுவாகும். என்றாலும் அரசாங்கத்தினால் வெறும் 150,000 ரூபாய் மாத்திரமே நட்ட ஈடாக வழங்கப்பட்டது.
ஒரு சில நிமிடங்கள் கழித்து ஸம்ஸுதீனுடைய மற்றொரு மகன் பஸாலும் எம்மோடு இணைந்து கொண்டார். 37 வயதுடைய பஸால் ஒரு மௌலவி ஆவார். சென்ற வருடம் இடம்பெற்ற சேதங்களை புனர்நிர்மாணம் செய்ய பள்ளிவாசலில் இருந்தே நிதிகள் கிடைக்கப்பெற்றதாக அவர் கூறுகிறார்.
“எமக்கு அழுத்தங்களைத் தந்த அந்த நாள் இன்னும் மறையவில்லை. அரசாங்கம் வீட்டுக்காக 50,000 ரூபாவும் கடைக்காக 100,000 ரூபாவும் வழங்கியது. அத்தோடு இது ஆரம்பத்தில் வழங்கப்படும் தொகை என்றும் பின்னர் மீதித்தொகையை வழங்குவோம் என்றும் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்தத் தொகையும் கிடைக்கவில்லை. எனினும் எமது மஸ்ஜித் மூலமாக முஸ்லிம்களுடைய நன்கொடைகள் ஊடாக எமக்கு நிதி கிடைத்தது. மஸ்ஜிதில் இருந்து நிதி கிடைக்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு செல்வதற்கு வேறு இடமே இருந்திருக்காது” என்று பஸால் கூறுகிறார்.
ஆகஸ்ட், 2018 இல் 205 மில்லியன் ரூபா நிதி, நட்டஈடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்திருந்தது நினைவூட்டக்கூடிய ஒன்றாகும். “அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியாது. இதிலிருந்து அரசாங்கம் எமது இனத்துக்கும் சமூகத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது” என பஸால் தெரிவிக்கிறார்.
குறித்த இனவாத வன்முறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் சிங்களவர்களில் ஒரு சிலரே என்பதை பஸால், ஸம்ஸுதீன் ஆகிய இருவரும் புரிந்து வைத்துள்ளார்கள். சிங்களவர்களுள் பெரும்பாலானோர் அந்த தாக்குதல்களுக்கு எதிரான கருத்தினையே கொண்டிருப்பார்கள் என்றே அவர்கள் இருவரும் நம்புகிறார்கள்.
“பிக்குமார்கள் மற்றும் அதிகமான சிங்கள மக்கள் எங்களுக்கு உதவினார்கள். அத்துடன் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்தவிதமான சமய முரண்பாடுகளும் இல்லை என்று நான் நம்புகிறேன். இது எல்லாம் அரசியல் சார்ந்தது. அரசியல் வாதிகளே இதனை உருவாக்குகிறார்கள். மேலும், சிங்களவர்கள் மத்தியில் எமது வியாபாரம் தொடர்பாக மிகைப்படக்கூறி அவர்களை பொறாமையடையச் செய்கிறார்கள்” என பஸால் கூறுகிறார்.
இஸ்லாத்தை அனைவருக்கும் கற்பிக்க வேண்டியது அவசியம் என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளதாக தான் எண்ணுவதாக பஸால் தெரிவிக்கிறார்.
“பெரும்பாலான சிங்களவர்கள் இஸ்லாம் தொடர்பாக தப்பபிப்பிராயங்களை வளர்த்துக்கொண்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நேரத்திலும் வித்தியாசமான பிரச்சினைகளை கொண்டுவருகிறார்கள். ஒரு நேரத்தில் ஹலால் இன்னொரு நேரத்தில் புர்கா அடுத்தது கருத்தடை மாத்திரை என இது நீண்டு செல்கிறது. இது போன்ற கற்பனைகளை நாம் எமது சமூகத்தில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்” என்றார்.
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி இனவாதத்தைத் தூண்டிய மஹாசோன் பலகாயாவின் ஸ்தாபகர் அமித் வீரசிங்கவும் திகனையச் சேர்ந்தவர் தான். அவரும் பஸாலும் கெங்கல்ல சிங்கள மஹா வித்தியாலயத்தில் ஒன்றாகவே கல்வியைக் கற்றுள்ளார்கள்.
“பாதை நெடுக பல்வேறு இடங்களில் தடைவேலிகளைப் போட்டிருந்தார்கள். அரசாங்கம் இவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்யவில்லை. செய்திருந்தால் இன்று எனது மகன் உயிரோடு இருந்திருப்பான்”என்று கூறியவாறே வீட்டின் வெளிப்புறத்தை ஸம்ஸுதீன் பார்க்கிறார்.
கலவரத்தை நேரில் கண்டவர்களும் அவர்களுடைய கொடூரமான அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
“இந்தக் கலவரத்தில் தலையிட விசேட அதிரடிப்படையினர் கூட பயப்பட்டார்கள். இராணுவத்தினுடைய தலையீடு இன்றி நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்கவே முடியாது. இல்லாவிட்டால் நாங்கள் அனைவருமே இறந்திருப்போம்” என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத திகனையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
நாம் அடுத்ததாக சென்ற இடம் அம்பால. அது திகனயில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. திகன கலவரம் ஏற்பட முன்னர் 4 முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் குமாரசிங்கவின் குடும்பத்தை சந்திக்க வேண்டும் என எண்ணினோம்.
குமாரசிங்கவின் மனைவி திலகா பத்மஸ்ரீ அப்போது தான் 2 பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு கூட்டி வந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.
“இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. எனது கணவனின் மரணம், எனது குடும்பத்துக்கு அளவிட முடியாத இழப்பாகும். பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு உதவுவதாகவும் வீட்டைக் கட்டித் தருவதாகவும் வாக்குத் தந்தார்கள். ஆனால் இப்போது அனைவரும் எங்களை மறந்துவிட்டார்கள்” என அவர் தெரிவித்தார்.
திகன கலவரத்தின் போது குமாரசிங்கவின் குடும்பத்தினர் இறுதிக் கிரியை வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்ததால் கலவரத்தை அவர்கள் யாரும் நேரில் காணவில்லை.
“எங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருந்ததில்லை. நாங்கள் இப்போதும் முஸ்லிம் கடைகளுக்குச் செல்கிறோம். வெளியூர்களில் இருந்து வந்தவர்களாலேயே தாக்குதல்கள் நடந்திருக்கிறது” என திலகா தெரிவித்தார்.
கலவரத்துக்குப் பின்னர் முஸ்லிம் குடும்பங்கள் உட்பட பலரும் குமாரசிங்கவுடைய குடும்பத்துக்கு பல்வேறு உதவிகளை வழங்கினர். “ கடந்த ஜனவரி முதலாம் திகதி பெரகட்டிய ஆலயத்துக்கு வந்த ஒரு குடும்பத்தினர் 50 000 ரூபா பணத்தை எமக்குத் தந்தார்கள்” என திலகா தெரிவித்தார்.
நாங்கள் கொழும்புக்குத் திரும்பிச் செல்லும்போது கோமகொட விகாரையில் வாகனத்தை நிறுத்தினோம். அங்கு கலவர காலத்தில் ஒரு சில முஸ்லிம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கிய அந்த விகாரையின் விகாராதிபதியை சந்தித்தோம். அவர் எம்மிடம் பின்வருமாறு தெரிவித்தார்.
” சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் மாத்திரமன்றி சமயத் தலைவர்களும் சமூகங்களை வீழ்த்துவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை இல்லாமலாக்க கலை சம்பந்தப்பட்ட அம்சங்களால் முடியும். ப்ரெட்டி சில்வா மற்றும் குணதாச கபுகே போன்ற கலைஞர்கள் அதை சரிவரச் செய்தார்கள். தற்போதைய கலைஞர்கள் அதைச்செய்வதேயில்லை. எந்த நாடகத்திலாவது முஸ்லிம் பெண்ணொருத்தியை சிங்கள இளைஞன் திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இருந்ததுண்டா? இதயத்தை குணமாக்க கலையம்சங்களால் முடியும். தற்போதைய ஊடகங்கள் ஹிந்தி நாடகங்களை மொழிபெயர்த்து ஒளிபரப்புவதிலேயே கவனம் செலுத்துகிறது. இது தான் இங்குள்ள மோசமான நிலைமை” என்றார்.
கோமகொட விகாரையின் விகாராதிபதி கஹகல தம்மானந்த தேரர் திகன கலவரம் நடந்த தினத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்.
“எனக்கு அந்த நாள் நினைவில் இருக்கிறது. நான் எனது அறையில் இருக்கும் போது, விகாரையை நோக்கி ஒரு சில முஸ்லிம் குடும்பங்கள் வருவதாக ஒரு சிறுவன் வந்து சொன்னான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் விகாரையை தாக்க வருகிறார்கள் என்றே நினைத்தேன். ஏனென்றால் அதுபோன்ற வதந்திகளே அந்நேரத்தில் அதிகமாகப் பரவியிருந்தன.
நான் எனது அறையை விட்டு விகாரைக்குச் சென்ற போது அங்கு 30 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் ஒன்று கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார்கள். ‘ஸாது குறைந்தது எங்களது குழந்தைகளையாவது காப்பாற்றுங்கள்” என்று ஒரு தாய் அழுது கொண்டே சொன்னார். எனக்கு அது மிகவும் கஷ்டமான ஒரு தருணமாக இருந்தது. நான் அவசரமாக முடிவெடுக்க வேண்டியிருந்தது. மறுமுறை யோசிக்காமல் விகாரையின் பிரசங்க மண்டபத்தை அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்தேன்.
விகாரைக்கு மிகவும் நெருக்கமான ஒரு சில இளைஞர்களை நான் அவசரமாகத் தொடர்பு கொண்டேன். ‘அவர்களை அனுப்பி விடாதீர்கள் ஹாமிதுருவனே. நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்’ என்று சொன்னார்கள். அவர்கள் அவசரமாக வந்தார்கள்.. வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித தயக்கமும் இன்றி உதவினார்கள். நாங்கள் உணவு சமைத்து அவர்களுக்கு வழங்கினோம். சிறுவர்களுக்கு பால் வழங்கியதோடு தலையணை, மெத்தை போன்றவற்றையும் வழங்கினோம். அந்த நேரத்தில் அனேக சிங்களவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த முஸ்லிம்களை பாதுகாக்க வேறென்ன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதன் பின்னர் பொலிஸார் வந்து பாதுகாப்பளித்தார்கள். அடுத்த நாள் காலை அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக வீடு செல்ல முடிந்தது.
அவர்கள் விகாரைக்கு பாதுகாப்புத் தேடி வந்தார்கள். நான் அவர்களது நம்பிக்கையை தகர்க்க விரும்பவில்லை. சிங்கள பௌத்தர்களே அந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள். என்னவாக இருந்தாலும் நான் உறுதியாகச் சொல்வது என்னவென்றால், அவர்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால் இது போன்ற இழி செயல்களை செய்திருக்கவே மாட்டார்கள்.
திகன சம்பவம் இப்போது முடிந்து விட்டது. ஆனால் முழுமையாக முடிந்து விட்டது என்று யார் சொன்னது? மஹாசோன் பலகாயவின் அமித் வீரசிங்க, தற்போது இனவாதத்தை தூண்டும் வகையிலான கைநூல் தொகுப்பொன்றை மக்களுக்கு விநியோகித்து வருகின்றார். இது சிங்கள புத்தாண்டு சீசனில் முஸ்லிம்களுடைய கடைகளில் பொருட்களை வாங்க விடாமல் புறக்கணிக்கச் செய்வதற்கான வேலையாகும். ஒரு சில சிங்கள தொழிலதிபர்களும் அமித்துக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.
-Vidivelli