கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இடம் பெற்று வரும் இரவு நேர திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புபட்டவர்கள் கிரீஸ் மனிதர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு மாத காலமாக பெரியாற்றுமுனை, கட்டையாறு, மாலிந்துறை, றஹ்மானியா நகர் மற்றும் அடப்பனார் வயல் ஆகிய பிரதேசங்களில் உள்ள 25 ற்கும் மேற்பட்ட வீடுகளில் ஓட்டைக் கழற்றி வீட்டுக்குள் இந்த மர்ம மனிதர்கள் இறங்கியிருக்கிறர்கள். இது குறித்து பொலிஸில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு வீட்டுக்குள் இறங்கும் இந்த நபர்கள் பணத்தை மாத்திரமே எடுத்துச் செல்வதாகவும் சில இடங்களில் ஓட்டைக் கழற்றி விட்டு, அருகில் உள்ள இன்னுமொரு வீட்டுக்குச் சென்று அங்கேயும் ஓட்டைக் கழற்றி விட்டுச் செல்வதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு மாத்திரம் பெரியாற்றுமுனை பிரதேசத்தில் உள்ள மூன்று ஆசிரியர்களின் வீடுகளுக்குள் இறங்கி, அங்கு பதற்ற நிலை ஒன்றை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
இந்த விடயம் தொடர்ந்து ஒவ்வொரு இரவும் நடைபெற்று வருவதால் இவர்கள் திருடர்களாக இருக்க முடியாது என்றும் இவர்கள் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி, சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கின்ற கிரீஸ் மனிதர்களாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது .
இது குறித்து, கிண்ணியா மஜ்லிஸ் சூராவின் தலைவர் ஏ.ஆர்.எம். பரீட் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த சம்பவங்களால் பிரதேசத்தில் ஓர் அச்சமான சூழ்நிலை ஒன்று உருவாகியிருக்கின்றது. இவற்றைத் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக பொலிஸாருடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம்.
இதன் பயனாக, இன்றிலிருந்து பெரியாற்றுமுனை, மாலிந்துறை மற்றும் கட்டையாறு ஆகிய பிரதேசங்களில் இரவு 10.30 மணிக்குப் பின்னர் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பிரதேசவாசிகளும் இந்த மர்ம நபர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு நோன்பு காலத்தில் இங்கு கிரீஸ் மனிதன் என்ற போர்வையில் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான சூழ்நிலையைப் போன்றதொரு அசாதாரண நிலையை தோற்றுவிப்பதற்கான ஆரம்ப நிலையாக இது இருக்கலாம். ஏனெனில், இன்னும் சுமார் ஒரு மாத காலமே புனித நோன்புக்கு இருக்கின்ற படியாலும் அந்த மர்ம நபர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கின்ற போதும் இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
-Vidivelli