இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடிய அறிகுறி தெரிகின்றது
சிங்கள பாடசாலையில் தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறித்து அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டு
சிங்கள மொழிப் பாடசாலையில் தமிழ் மொழிக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதைக் காணும் போது இந்த நாட்டின் மிக முக்கியமான இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைவழங்கக் கூடிய அறிகுறி துல்லியமாக தென்படுகிறது. அதே போன்று ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டின் காரணமாக நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியைக் கொண்டிருந்தாலும் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் கணிசமானளவு கல்வித் துறைக்காக நிதி ஒதுக்கீடுகள் செய்துள்ளார்கள். இந்த அரசாங்கம் சிறந்த கல்வி சமூகத்தை உருவாக்குவதற்கும் இனங்களுக்கிடையே நிரந்தரமான இன ஐக்கியத்தை உருவாக்குவதற்கும் சிறந்த வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்று முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை பூஜாப்பிட்டிய நாலந்த மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்கின்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு வகுப்பறைக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழா அதிபர் மாதிப்பொல தம்மிக தேரர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ஹலீம் தொடர்ந்து உரையாற்றும் போது, கடந்த காலங்களில் சிங்கள தமிழ் மக்களுக்கிடையிலான முரண்பாடு மொழி மூலமாகவும் தோற்றுவிக்கப்பட்டது. இது இல்லாமல் செய்வதற்காக எமது அரசாங்கத்தினால் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று தான் ஏனைய இனங்களுடைய மொழிகளையும் அறிந்து கொள்வதாகும். பௌத்த சமயத் தலைவரை அதிபராகக் கொண்டு இயங்கும் இந்த சிங்களப் பாடசாலையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நான் கூட தாய் மொழியாக தமிழ் மொழியைப் பேசுபவன். இந்தப் பாடசாலையில் சிங்கள மாணவிகள் தமிழ் மொழியில் உரை நிகழ்த்தியதையிட்டு நான் மிகவும் மன மகிழ்ச்சியடைகின்றேன். அது மட்டுமல்ல சில இடங்களில் தமிழ் வாசங்களுடைய பதாதைகளும் இந்தப் பாடசாலை வளாகத்திற்குள் காணக் கூடியதாக உள்ளது. இப்பாடசாலையில் சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். இன நல்லிணக்கத்துக்கும் சிறப்பான எதிர்காலத்துக்கும் உவப்பான கல்விச் சூழல் இந்த அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைக் கல்வியில் மாணவர் மாணவிகள் ஏனைய மொழிகளை கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இந்தப் பாடசாலையினர் சரியாகப் புரிந்து கொண்டு தமிழ் மொழிக்கு உரிய உயர் அந்தஸ்தை வழங்கி வருகின்றனர். இதைப்பார்க்கின்ற போது எமக்கு ஆச்சரியமாக உள்ளது.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டம் கிராமிய மட்டத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காகும்.
கிராமத்திலுள்ள பிள்ளைகள் நகரப் பாடசாலைகளை நாடிச் செல்வதிலிருந்து தடுப்பதற்காகும். எல்லாப் பிள்ளைகளையும் கவர்ச்சிகரமான நகரப் பாடசாலைகளுக்குள்ளே உள்வாங்க முடியாது. அந்த வகையில் தான் கல்வி அமைச்சு நகரப் பாடசாலை தன்மைக்கு ஏற்ப கிராம மட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் ஒன்று அல்லது இரண்டு பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுமிக்க அந்த 52 நாட்கள் நாங்கள் மறக்க முடியாது. அக்கால கட்டம் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியினை அடைந்தது. உள்நாட்டு ரீதியாகவும் வெளிநாட்டு ரீதியாகவும் நாட்டுக்குள் வர வேண்டிய பொருளாதாரம் வராமல் வீழ்ச்சி கண்டது. இப்படியானதொரு சூழலில் இருந்து நாட்டை மீட்டெடுத்து கல்வி அபிவிருத்திக்காகவும் பொது மக்களின் நலனுக்காகவும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகளை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்கட்சி உறுப்பினர்கள் கூடப் பாராட்டுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயப் பணிப்பாளர், பூஜாப்பிடடிய எதிர்கட்சித் தலைவர் ரம்ஜான் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-Vidivelli