ஐ.தே.மு. ஜனாதிபதியுடன் கூட்டமைத்த அரசு கசப்பான அனுபவங்களையே தந்தது
கலேவலயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவையும் சேர்த்துக்கொண்டு அமைத்திருந்த அரசாங்கம் கசப்பான அனுபவங்களையே பெற்றுத்தந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில், கலேவலயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் புதிய அலுவலக கட்டடத்தின் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது
முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செய்த சூழ்ச்சியும்,சதியும் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை மட்டுமல்ல சர்வதேச மட்டத்தில் இந்த நாட்டுக்கு இருந்த கீர்த்தியை இல்லாமலாக்கி பாரிய கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வெளிநாட்டு உதவிகளை பெறும் வாய்ப்பையும் வெகுவாக குறைத்து விட்டது. பெரிய அளவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயல் திட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இது இந்த நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.
ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மை கட்சிகளோடு இணைந்து இப்போது அரசாங்கத்தை கொண்டு செல்கிறது. ஏனைய கட்சிகளுக்கு அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் எங்களுக்கு ஒத்துழைப்பதை தவிர வேறுவழியில்லை. வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் சுமார் 27 பேர் வாக்களிக்காமலேயே நழுவிச்சென்று விட்டதும் இதனை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் இப்பொழுது எதிர் கட்சியினருக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல் போய்விட்டது. இதனை வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்க்ஷ இப்பொழுது அரசாங்கத்தை தோற்கடித்திருக்கலாமே என்று கூறித்திரிகின்றார்.அவ்வாறு எங்களை தோற்கடித்துவிட முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களோடு இருப்பதுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருக்கிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு, மொட்டு கட்சியினரோடு கூட்டுச்சேர விருப்பமில்லாதது போலவே தோன்றுகின்றது. தொடர்ந்தும் அவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனவாம்.என்னவாக இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டக்கூடிய வேட்பாளருடன் களமிறங்கவுள்ளோம்.இதை சகித்துக்கொள்ள முடியாமல் தங்களது உட்பூசல்களை தீர்த்துக்கொள்ள வழியின்றி அவர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
நாம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு 1150 பில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1150 பில்லியன் ரூபாய் என்பது பெரிய தொகையாகும். இது வெறும் பணத்தால் கணக்கிட முடியாது. மாறாக மக்களின் நிரந்தரமான குடிநீர் தீர்வுக்கு வழிகோலுகின்றது. அவ்வாறே நாடுமுழுவதிலும் 1000 கிராமங்களுக்கு சமூக நீர்வழங்கல் திட்டங்களின் ஊடாக இந்த வருடத்தில் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இம்மாதம் முதல் இவ்வருடத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த செயற்திட்டங்கள் நிறைவு செய்யப்படவுள்ளன. இந்த பிரதேச மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இப்பங்கட்டுவ குளத்திலிருந்து பெறப்படும் நீர் நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக வழங்கப்படவுள்ளது.
கலேவல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவிட்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறே நாவுலயில் இருந்து நீரை பெற்று மேலும் 15 கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு தூய குடிநீரை வழங்குவதற்கு இன்னொரு நீர் வழங்கல் திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வில் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கலேவல பிரதேசபை உறுப்பினர் மௌபீக் மேலும் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
-Vidivelli