குடியேற்றத்திற்கு எதிராக செயற்படும் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவீடனின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியொருவர் குடியேற்றவாசிகளை அதிகம் கவர்ந்திழுப்பதற்காக பள்ளிவாசலும் கலாசார மத்திய நிலையமும் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நகரத்திலுள்ள சனத்தொகை வீழ்ச்சியினைக் சீர்செய்வதற்கு குடியேற்றவாசிகளின் வருகை அவசியம் எனத் தான் கருதுவதாக தீவிர வலதுசாரி சுவீடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மார்க் கொலின்ஸ் தெரிவித்ததாக தி லோக்கல் சுவீடன் தெரிவித்துள்ளது.
வடக்கு சுவீடனின் வாஸ்டேர்னோர்லேண்ட் மாநிலத்தின் கிரம்போர்ட்ஸ் நகரில் பள்ளிவாசலும் கலாசார மத்திய நிலையமும் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனது நோக்கம் என்னவென்றால் இங்கு பள்ளிவாசலும் கலாசார மத்திய நிலையமும் அமைக்கப்படுமானால் நகரத்திற்கு பொறுப்பானவர்களாக அவர்களை வலுவூட்ட முடியும் என அவரை மேற்கோள்காட்டி ஊடக வலையமைப்பு தெரிவித்துள்ளது.
சுவீடனில் நகர்ந்துகொண்டிருக்கும் குடியேற்றவாசிகள் வியாபார நோக்கம் கொண்டவர்கள். அவர்கள்தான் எமக்குத் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகரப் பகுதியில் வருடத்திற்கு 100 பேர் என்ற அடிப்படையில் குறைவடைந்து செல்கின்றனர். ஒட்டுமொத்தமாக வாஸ்டேர்னோர்லேண்ட் மாநிலத்தில் வருடமொன்றிற்கு சுமார் 500 பேர் குறைவடைகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-Vidivelli