ஜும்ஆ தொழுகைக்குத் தயார் நிலையில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் கடந்த வெள்ளிக்கிழமை மூர்க்கத்தனமாக நியூஸிலாந்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக் கிறார்கள்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் இந்தக் கொடூரம் இடம்பெற்றிருக்கிறது. உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. அதுவும் நியூஸிலாந்தில் இடம்பெற்றுள்ளதா என்று வியப்பில் ஆழ்ந்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 34 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 12 பேரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக நியூஸிலாந்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டினை நடத்திய தீவிரவாதி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் ஹரிசன் டரன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாதிகள் முஸ்லிம்களை பள்ளிவாசல்களில் தொழுகையின்போது இலகுவாக இலக்கு வைக்க முடியும். தங்கள் தீவிரவாத தாக்குதல்களை கச்சிதமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே பள்ளிவாசல்களை இலக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள். எமது நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் 1990 இல் காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை இலக்கு வைத்து நூற்றுக்கணக்கானோரின் உயிர்களைப் பலியெடுத்தார்கள்.
நியூஸிலாந்து தாக்குதலுடன் தொடர்புபட்ட 3 ஆண்கள், ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்ட்சர்ச் பொலிஸ் ஆணையாளர் மைக் புஷ் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் நேரலை செய்துகொண்டே தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
“இரு வேறு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்தத் தாக்குதலைத் தொடுப்பதற்கு சுமார் 9 நிமிடங்களுக்கு முன்பு அது குறித்து அறிக்கை ஒன்றை எனக்கும் மேலும் 30 பேருக்கும் மின்னஞ்சல் செய்தார். ஆனால் தாக்குதலுக்கான காரணமோ தாக்குதல் நடக்கவுள்ள இடம்பற்றிய விபரங்களோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மின்னஞ்சல் கிடைத்து 2 நிமிடங்களில் அது குறித்து பாதுகாப்பு தரப்புக்கு தெரியப்படுத்தினேன்.
இது ஒரு தீவிரவாதத் தாக்குதல். தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு நியூஸிலாந்திலும் இந்த உலகத்திலும் இடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இரு பள்ளிவாசல் இமாம்களும் தாம் தொடர்ந்து நியூஸிலாந்தை நேசிப்பதாக கூறியுள்ளமை தேசத்தின் பற்றுதலை வெளிப்படுத்துகிறது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் நியூஸிலாந்தில் குடியேறிய வெளிநாட்டு முஸ்லிம்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரே பலியாகியுள்ளனர் என இனம் காணப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் கிரிக்கெட் அணி இந்த அனர்த்தத்திலிருந்தும் உயிர் தப்பியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார். உலக நாடுகள் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளன.
நியூஸிலாந்தில் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களு க்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து அரசும் அவுஸ்திரேலிய அரசும் இச் சம்பவம் குறித்து துரித விசாரணைகளை நடத்தி காரணங்களை ஆராயவேண்டும். இதன் பின்னணியில் வேறு ஆயுதக் குழுக்கள் தொடர்புபட்டுள்ளனவா என்பதைக் கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
-Vidivelli