ஆட்சி மாற்றத்தின் நோக்கம் இன்று கனவாகி விட்டது இரண்டு கட்சிகளும் தவறுகளை திருத்தி ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவிப்பு
இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டுக்காக ஒருமித்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திலே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்றது. ஆனால் எதிர்ப்பார்த்த நோக்கங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு வெறும் கனவாகி விட்டது. போட்டித்தன்மையுடன் இரண்டு கட்சிகளும் செயற்பட்டால் பிறிதொரு தரப்பினரே இலாபம் பெறுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
வியாங்கொட பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் தொடர்ந்து போட்டித் தன்மையுடனும், முரண்பாடுகளுடனும் அரசியலில் செல்வாக்கு செலுத்தின. இவ்வாறான போட்டித்தன்மையே முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக காணப்பட்டது.
நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு புதிய அரசியல் கொள்கைகளை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கமைய 2015 ஆம் ஆண்டு பாரிய போராட்டத்தின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமாக மாறுபட்ட அரசியல் நிர்வாகத்தை முன்னெடுத்து சென்றது. இந்த ஒருமைப்பாடு தொடர்ந்து நீடிக்கவில்லை. தேசிய அரசாங்கம் அமைக்கும் போது பல முன்னேற்றகரமான அரசியல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இரண்டு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதும் அவை செயற்படுத்தப்படவில்லை. உள்ளக ரீதியிலான முரண்பாடுகள் ஒருகட்டத்தில் உச்சகட்டத்தினை அடைந்தது. இதன் பெறுபேறுகள் இரண்டு தரப்பிலும் தாக்கங்களை ஏற்படுத்தின. ஆட்சி மாற்றம் உருவாக்கப்பட்டமைக்கான நோக்கம் இன்று வீழ்த்தப்பட்டுள்ளது என்பது கவலைக்குரியது.
பொதுவான விடயங்களையும், முன்னேற்றகரமான விடயங்களையும் அரசியல் களத்தில் எடுத்துரைக்கும் போது ஒரு தரப்பினரால் நான் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் என்று விமர்சிக்கப்படுகின்றேன். இவ்வாறான விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமும் கிடையாது. எனது அரசியல் பயணம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலேயே தொடங்கியது. சுதந்திர கட்சியிலே முடிவுறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் புதிய மாற்றங்களை அரசியலில் ஏற்படுத்த வேண்டும். தேசிய அரசாங்கம் முடிவுறுவதற்கு பல்வேறு காரணிகள் இரு தரப்பிலும் காணப்படலாம். ஆனால் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்திய மக்கள் ஏமாற்றமடையக் கூடாது. தவறுகளை திருத்திக் கொண்டு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது பல பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றார்.
-Vidivelli