புத்தளம் மக்களின் ‘கொழும்பு’ போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்

0 736

புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிராக அம் மாவட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் 200 நாட்களை எட்டியுள்ள நிலையில் குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நாட்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

இந் நிலையில் புத்தளம் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளையும் அப் பகுதி மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இப் போராட்டத்திற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள புத்தளம் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பு தம்மாலியன்ற முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஓரங்கமாக இதுவரை காலமும் புத்தளத்திலேயே போராட்டத்தை முன்னெடுத்து வந்த மக்களை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்துவந்து காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மக்களின் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் அரசாங்கம் கண்டுகொள்ளாது குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை நிதியை இத் திட்டத்திற்கென ஒதுக்கியிருக்கின்ற நிலையிலுமே கொழும்பில் இப் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்தப் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில், புத்தளம் மாவட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டியது நாட்டிலுள்ள சகல பகுதி மக்களினதும் கடப்பாடாகும். அந்த வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் முடியுமானவர்கள் கலந்து கொண்டு ஆதரவை வெளிப்படுத்துவதன் மூலமாக அரசாங்கத்திற்கும் இத்திட்டத்தை முன்னின்று செயற்படுத்துபவர்களுக்கும் இதன் பாரதூரத்தை உணர்த்த முன்வர வேண்டும். இதன் மூலம் தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவையின் தலையீட்டைப் பெற்று தீர்வு காணவும் வழிசமைக்க முடியும்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று முன்தினம் பாரா­ளு­மன்றக் குழு அறையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்பதில் உறுதியாகவுள்ளார்.  அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது அமைச்­சர்­க­ளான ரிசாத் பதி­யுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இவ்­வி­காரம் குறித்து சுட்­டிக்­காட்­டி­ய­போது, விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­ச­ரான சம்­பிக்க ரண­வக்க வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டதாகவும் அறிய முடிகிறது. இந்­நி­லையில் அவ­ருடன் பேச்சு நடத்­து­வ­தை­விட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவுடன் பேசுவதே பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்­தளம் மாவட்ட சிவில் பிர­தி­நி­திகள், சர்வ மத தலை­வர்கள், புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ள் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்திலேயே இத் தீர்­மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த புத்தளம் சிவில் சமூக பிரதிநிதிகளும் இத் திட்டத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தமது தரப்பினர் விரைவில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றைக் கோரவுள்ளதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இவற்றுக்கு அப்பால் இந்த விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரும் ஒருமித்து நின்று புத்தளம் மாவட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும். இது முஸ்லிம்களுக்கு மாத்திரமான பிரச்சினை இல்லை என்ற போதிலும் இப் போராட்டத்தை புத்தளம் வாழ் முஸ்லிம் மக்களே தலைமைதாங்கி ஏனைய சமூகங்களின் ஆதரவுடன் முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அவர்களது போராட்டத்துக்கு உந்துசக்தியளிக்கும் வகையில் முஸ்லிம் எம்.பி.க்களும் எதிர்வரும் 19 ஆம் திகதிய கொழும்பு போராட்டத்தில் பங்கெடுப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் இப் போராட்டத்தில் பங்கேற்று மக்கள் சக்தியின் பலத்தை வெளிப்படுத்த முன்வரவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.