அரசாங்கம் முன்னெடுத்துள்ள புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தை நிறுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கோரி கிளீன் புத்தளம் அமைப்பு மற்றும் முஸ்லிம் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு என்பன எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிடம் நேற்று மகஜரொன்றினைக் கையளித்துள்ளன.
அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் புத்தளத்தில் கொழும்பு குப்பைகள் கொட்டப்படுவதால் சூழல் பாதிப்படைவதுடன் அப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் எதிர்நோக்குவார்கள் என குறிப்பிட்ட அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவரிடம் முறைப்பாடுகளை முன்வைத்தன.
கிளீன் புத்தளம் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ‘இத்திட்டம் அப்பகுதி மக்களுக்குப் பாதிப்பானது என பலத்த எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளேன். அத்தோடு இத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதமொன்றினையும் கோரவுள்ளார்கள் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கிளீன் புத்தளம் அமைப்பின் சார்பில் இல்ஹாம் மரிக்கார், டாக்டர் சராபத், மொஹமட் மௌபீர், சாஜஹான் ஆகியோரும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் சார்பில் ஐ.என்.எம்.மிப்லால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி அறுவாக்காடு குப்பைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் புத்தளம் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றிணையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli