நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விவகாரமாக கல்முனை உபபிரதேச செயலகம் இருந்து வருகிறது. அவ்விவகாரம் தற்போது சந்திக்கு வந்துள்ளது. கல்முனை உபபிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்திக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அங்கு இனரீதியிலான முறுகல் நிலையினை உருவாக்கிவிடும் என அஞ்சப்படுகிறது.
கல்முனையில் பிரதேச செயலகமொன்றும், உபபிரதேச செயலகமொன்றும் இயங்கி வருகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை கல்முனை பிரதேச செயலகம் நிர்வகித்து வருகிறது. இதேவேளை, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை கல்முனை உபபிரதேச செயலகம் நிர்வகிக்கிறது. கல்முனை உபபிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டுமென்கின்ற கோரிக்கை தமிழ் தரப்புகளால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டாலும் அக்கோரிக்கை தற்போது மிகவும் வலுப்பெற்றுள்ளது.
தற்போது விவாதிக்கப்பட்டு வரும் வரவு – செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான தேவைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. பேச்சுவார்த்தைகளும் நடத்திவருகிறது.
கல்முனை உபபிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டுமாயின் அதற்குரிய நிர்வாக எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும். அவ்வாறு எல்லை நிர்ணயிக்கப்படும்போது கல்முனை நகர்ப்பகுதி கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டுவிடும். இதனாலே முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கல்முனை நகர்ப்பகுதியிலேயே அரச நிறுவனங்கள், மத்திய சந்தை, வர்த்தக நிறுவனங்கள் என்பன உள்ளடங்கியுள்ளன. அது ஒரு மையமாக இருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் கல்முனை நகரத்தை இழப்பதற்கு விரும்பவில்லை. தமிழ்த்தரப்பும் முஸ்லிம் தரப்பும் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கலந்து பேசி ஒரு தீர்மானத்துக்கு வருமாறு பிரதமர் இரு சாராரையும் வேண்டியுள்ளார்.
“இப்பிரச்சினையில் முஸ்லிம்– தமிழ் மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தீர்வுகளை எட்டவே முயற்சிக்கிறோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வு காணத் தயாராக இருக்கிறோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை கவனத்திற்கொள்ளத்தக்கது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இவ்விவகாரத்தில் இனவாத கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துகள் நோக்கத்தக்கவை. ‘கல்முனை உபபிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல் இரு சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்த வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறியுள்ளார்.
ஒரு சமூகம் மாத்திரம் பிரதேச செயலகம் ஒன்றுக்குள் உள்வாங்கப்படக்கூடாது. இது அப்பகுதியில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. பிரதேச செயலக எல்லைகள் ஒரு சமூகத்துக்கு மாத்திரம் பிரித்துக் கொடுக்கப்படக்கூடாது. இவ்வாறான ஒரு சட்டம் எமது நாட்டில் இல்லை.
இந்த முயற்சி முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் முறுகல் நிலையை உருவாக்கிவிடக்கூடாது. நிர்வாக மையங்களான பிரதேச செயலகங்கள் இனரீதியில் உருவாக்கப்பட்டால் அது பாரிய அழிவுகளுக்கே காரணமாக அமையும். இதுபற்றி இரு தரப்பினரும் சிந்திக்க வேண்டும். கலந்துரையாடல்கள், விட்டுக்கொடுப்புகள் மூலம் தீர்வொன்றினை எட்ட வேண்டும்.
-Vidivelli