பல வாரங்களாக யுத்தத்தில் சிக்கியுள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்து யெமனில் யுத்தத்தில் ஈடுபடும் தரப்புக்கள் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.
வடமேற்கு யெமனின் ஹஜ்ஜாஸ் குஷார் மாவட்டத்தில் சவூதி அரேபிய – ஐக்கிய அரபு அமீரகக் கூட்டுப் படையினர் மேற்கொண்ட வான் தாக்குதலில் 23 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹெளதி சார்பு அல்-மசிராஹ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான அல்-அரபிய்யா தொலைக்காட்சி அலைவரிசை ஹெளதிகள் ஹாஜொர் பழங்குடியின உறுப்பினர்கள் பலரைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களில் இடம்பெற்ற உயிரிழப்புக்களில் 10 பெண்களும் 12 சிறுவர்களும் உள்ளடங்குவதாக மருத்துவ அறிக்கைகளை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த உயிரிழப்புக்களையும் காயமடையச் செய்தமையினையும் நாம் ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் யெமனுக்கான மனிதாபிமான இணைப்பாளர் லைஸ் கிரான்டி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
தீர்வுகாண வேண்டிய, தீர்வுகாணப்படக் கூடிய இந்த முரண்பாடு காரணமாக தேவையற்ற முறையில் அப்பாவி மக்கள் உயிரிழப்பது அதிர்ச்சியைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹஜ்ஜாஸ் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள உதவி தேவைப்படும் மக்களும் முடியுமான வரை அனைத்து உதவிகளைச் செய்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-Vidivelli