அடிக்கடி புயல் தாக்கம் ஏற்படுகின்ற மக்கள் வசிக்காத பகுதியில் 23,000 அகதிகளை அடுத்த மாதம் குடியமர்த்துவதற்கான திட்டத்தை பங்களாதேஷ் தொடருமானால் அது புதிய நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய ஆபத்து உருவாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான தூதுவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் பஹாசன் சார் பகுதிக்கு விஜயம் செய்திருந்த மியன்மார் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பெண் அறிக்கையாளரான யங்ஹீ லீ கடந்த திங்கட்கிழமை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வங்காள விரிகுடாவிலுள்ள குறித்த தீவு வாழ்வதற்கு உண்மையிலேயே பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
அதனை மோசமான திட்டம் என அறிவித்த அவர் அகதிகளின் சம்மதமின்றி இவ்வாறு அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது புதிய பிரச்சினைகளை உருவாக்கக் கூடியது எனத் தெரிவித்தார்.
அகதிகள் சேறும் சகதியும் நிறைந்த பருவப் பெயர்ச்சிக் காலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுகின்ற தாழ் நிலத்தீவான வாழ்வாதார வசதிகள் மிகக் குறைந்த ஹாசன் சார் பகுதியில் அடைத்துவிடப்படவுள்ளனர் என ரோஹிங்யாவுக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர்.
2017 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடக்கம் மியன்மார் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் தீ வைப்பினையடுத்து பங்களாதேஷுக்கு தப்பி வந்து தஞ்சமடைந்த 730,000 இற்கும் மேற்பட்ட ரோஹிங்ய மக்கள் சனநெரிசல்மிக்க முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
-Vidivelli