வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இந்தோனேஷியப் பெண்ணை மலேஷிய நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலுமிருந்தும் விடுவித்துள்ளதாக மலேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள இரசாயன ஆயுதமான வீ.எக்ஸ். எனும் நரம்பு மூலம் செலுத்தப்படும் இரசாயனத்தின் மூலம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கடந்த 2017 பெப்ரவரி 13 ஆம் திகதி நஞ்சூட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 27 வயதான சித்தி ஆயிஷா இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைக் குற்றச்சாட்டின் மற்றுமொரு பெண் சந்தேக நபரான வியட்நாமைச் சேர்ந்த டொஆன் தியி ஹொஉங் (30) தற்போதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கோலாலம்பூரிலுள்ள இந்தோனேஷியத் தூதரகம் இந்தத் தீர்மானத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளது. சித்தி ஆயிஷா மற்றும் டொஆன் தியி ஹொஉங் ஆகிய இரு பெண்களும் கிம்மின் முகத்தில் விசிறுவதை பாதுகாப்புக் கண்காணிப்புக் கெமராக்கள் காண்பித்ததையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தொலைக்காட்சியில் காண்பிப்பதற்கான வேடிக்கைச் செயற்பாடு ஒன்றிற்காக சிலர் கொரியர்கள் அல்லது ஜப்பானியர்கள் 90 டொலரை வழங்கியதாக ஆயிஷாவின் சட்டத்தரணி தெரிவித்தார்.
ஹொஉங்கைப் போன்று சித்தியின் விரல் நகங்களில் நச்சு இரசாயனம் காணப்படவில்லை எனவும் அவரிடம் நஞ்சூட்டியமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் தடயவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-Vidivlli