ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடு முப்பது எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களிப்பர்
முஜிபுர் ரஹ்மான் திட்டவட்டம்
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வரவு – செலவுத்திட்டத்தின் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வாக்களிப்பில் அரசாங்கத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
வரவு –செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீட்டுக்கு எதிராக வாக்களிப்பதென்று ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கும் எதிராக பல்வேறு பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உகண்டாவுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று முன்தினம் அந்நாட்டுக்குச் சென்றுள்ளதால் இன்று நடைபெறும் அவரது நிதியொதுக்கீட்டுக்கான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வரவு –செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவளித்து வாக்களிக்கவுள்ளதாக இணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
-Vidivelli