தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டை நாசமாக்கியுள்ளது.
தேசிய உற்பத்திகளை வீழ்த்தி, சர்வதேச முதலீடுகளை தடுத்து ஆசியாவின் கீழ்மட்ட நாடக இலங்கையை மாற்றியுள்ள நிலையில் இனியும் இந்த ஆட்சிக்கு இடமளிக்க முடியாது. ஆகவே, ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து புதிய ஆட்சிக்கு உதவுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எமது கையில் இருந்த 50 நாட்கள் அரசாங்கம் தான் காரணமென நிதியமைச்சர் தனது வரவு செலவுத்திட்ட உரையில் கூறினார். அதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து 2019 மார்ச் 5ஆம் திகதி வரையில் வரவு செலவுத்திட்டம் முன்வைக்கும் வரையில் இந்த அரசாங்கத்தின் 1516 நாட்களில், 1464 நாட்கள் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் நிருவாகத்தை விடவும், 52 நாட்கள் பிரதமராக செயற்பட்ட எனது ஆட்சியில்தான் இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன், நாடும் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதே நிதியமைச்சர் முன்வைத்துள குற்றச்சாட்டாகும். கடந்தாண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியதையடுத்து அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. அதன் பின்னரே ஜனாதிபதி என்னை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கமொன்றினை உருவாக்கினார். இந்த அரசாங்கத்தை வீழ்த்த ஜனாதிபதி முன்வைத்த காரணிகளில் பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்த காரணிகளில் ஒன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொண்டுசெல்லும் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை கண்டுள்ளது. ஆகவே தேசிய அரசாங்கமாக தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்ற காரணத்தையே ஜனாதிபதி முன்வைத்தார்.
இதனையடுத்தே ஜனாதிபதி பொதுத் தேர்தல் ஒன்றினையும் நடத்தக்கோரினார். அதனை எதிர்த்து எதிர்த்தரப்புகள் நீதிமன்றம் சென்றனர், நீதிமன்றத்தில் தீர்ப்பொன்று வழங்கப்பட்டது. அதிலிருந்து அரசாங்கம் செயற்படமுடியாது போய்விட்டது. ஆகவே எனது கையில் பிரதமர் பதவியை கொடுத்து சரியாக 19 நாட்களில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த 19 நாட்களில் எம்மால் முழுமையான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றினை முன்வைக்க முடியாது போய்விட்டது. எனினும் எம்மிடம் இருந்த 19 நாட்களில் மக்களுக்கு எம்மாலான சலுகைகளை கொடுத்து மக்களின் வாழ்வாதார சுமைகளை குறைக்க முடிந்தது. குறிப்பாக இரண்டு தடவைகள் எண்ணெய் விலையை குறைத்தும், விவசாயிகளுக்கான உர மானியம் கொடுத்தும் நெருக்கடிகளை குறைக்க முடிந்தது. அதேபோல் குறித்த சில காலத்தில் சர்வதேச முதலீட்டாளர்களை கூட இலங்கைக்குள் வரவழைக்க முடிந்தது. எனினும் அதன் பின்னரான அரசியல் நெருக்கடியை அடுத்து அவர்கள் தமது முடிவுகளை மாற்றிக்கொண்டனர். ஐக்கிய தேசிய கட்சி -– தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணியே இந்த வாய்ப்புகளை இல்லாது செய்தன.
எனது ஆட்சியில் 9 ஆண்டுகளில் யுத்தத்தை நடத்தியதுடன் நாட்டின் பொருளாதாரத்தை 6.4 வீதமாக உயர்த்தினோம். இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் அதிக உயர்வுகொண்ட காலம் இதுவேயாகும். இந்தக் காலகட்டத்தில் சர்வதேசம் எதிர்கொண்ட எண்ணெய் நெருக்கடி, கடன் நெருக்கடி, சர்வதேச அழுத்தம் என பல நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுத்தோம். இந்தக் காலத்தில் நாட்டின் வளங்கள் முழுமையாக நாசமாகும் அளவிற்கு மோசமான யுத்தம் ஒன்றும் இடம்பெற்றுக் கொண்டிருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால் இந்த நெருக்கடிகளின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நாம் இடமளிக்கவில்லை. இன்றைய தலைவர்கள் போல் மக்கள் முன்னால் அழுது, முன்னைய ஆட்சியாளர்களை குறைகூறி எமது இயலாமையை வெளிப்படுத்தவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டினோம், நாட்டினையும் கட்டியெழுப்பினோம். ஐக்கிய நாடக மாற்றினோம்.
எனினும் இந்த அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சியை குறைத்துக்கொண்டுதான் வந்துள்ளது. கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3 வீதத்துடன் நின்றுவிட்டது. சர்வதேச கருத்துக்கணிப்பின் பிரகாரம் 2014 ஆம் ஆண்டு இலங்கை, ஆசியாவில் முதலாம் இடத்திலிருந்தது. எனினும் 2017 ஆம் ஆண்டு அதே கணிப்பின் பிரகாரம் இலங்கை ஆசியாவில் இறுதி இடத்தை வகிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மட்டுமே எம்மை விடவும் பின்தங்கிய நாடாக உள்ளது. 2018 ஆம் ஆண்டின் அறிக்கையில் ஒருவேளை இலங்கை இறுதியான நாடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று இலங்கையின் வியாபாரிகள் அனைவரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அதேபோல் கடன்களை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உள்ளதாகக் கூறுகின்றனர். வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தக்கூட முடியாது வியாபாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு வரிகளை மட்டுமே அறவிட்டு வருகின்றது. ஆனால் வருமானம் அதிகரிக்கவில்லை. தேசிய உற்பத்தி இல்லாது இந்தக் காலத்தில் கடன் அதிகரித்துள்ளது. எமது காலத்தில் நாம் யுத்தத்தை வெற்றிகொள்ளவும், நாட்டினை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்லவுமே கடன்களை வாங்கினோம். ஆனால் கடன் சுமை 71 வீதமாக நாம் குறைத்தோம். ஆனால் இன்று கடன் சுமை 86 வீதமாக மாறியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு வரையில் இலங்கையின் மொத்தக் கடன் தொகை 7391 பில்லியனாக இருந்தது. ஆனால் எமது காலத்தில் தேசிய உற்பத்திகள் வெகுவாக அபிவிருத்தி கண்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இப்போது வரையில் நாட்டின் கடன் தொகை 12 ட்ரில்லியனாக உள்ளது. இன்று தேசிய உற்பத்திக்கு இணையாக நாட்டின் கடன்சுமை 91 வீதமாக அதிகரித்த அச்சுறுத்தல் நிலைமை காணப்படுகின்றது. பிரதமரும், மத்திய வங்கி ஆளுநரும் நாட்டின் கடன்களை செலுத்துவது கடினமாக உள்ளது என்ற காரணிகளையே கூறுகின்றனர். இன்று எமது நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. மாறாக வேலைகள் பறிக்கப்படும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் 6 இலட்சத்து 54 ஆயிரம் வேலைகள் பறிபோயுள்ளன. ஆனால் இவை குறித்து நிதியமைச்சர் ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. மாறாக இவர்கள் பொய்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைகளை பெற்றுக்கொள்ள பாரதூரமான உடன்படிக்கைகளுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. விடுதலைப்புலிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, இராணுவத்தை தண்டித்து, அதேபோல் புலிகளுக்கு நிவாரணம், புலிகளை விடுதலை செய்தல் என்ற சகல உடன்படிக்கையையும் ஏற்றுக்கொண்டது. ஆனாலும் இலங்கைக்கு சாதகமான பொருளாதார வளர்ச்சி எதுவுமே இருக்கவில்லை. இருந்த நிலையை விடவும் மோசமான நிலைமைக்கே இன்று இலங்கை தள்ளப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆசியாவில் பலமான பங்குகள் இலங்கையே வைத்திருந்தது . ஆனால் இன்று அந்த நிலைமையும் இல்லை. ஆகவே இலங்கை தொடர்பில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. மத்திய வங்கியில் அரசாங்கமே களவு செய்யும்பொது சர்வதேசம் எம்மை நிராகரிப்பது பெரிய விடயமல்ல. எமது ஆட்சியில் இலங்கையின் ரூபாவின் பெறுமதியை தக்கவைத்தோம், ஆனால் இந்த ஆட்சியில்தான் இலங்கையின் ரூபாவின் விலை வீழ்ச்சியடைந்தது. 39 வீதத்தால் ரூபாவின் விலை வீழ்ச்சிகண்டது. அரச கடன் அதிகரித்துள்ளது. ஆகவே எந்தவொரு அடிப்படை கட்டுப்பாடும் இல்லாத ஆட்சியே இன்று முன்னெடுக்கப்படுகின்றது என்பது இதன் மூலமாக வெளிப்படுகின்றது.
எமது ஆட்சியில் நானும் எமது நிதி அமைச்சர்களும் நாட்டின் இலக்கை நோக்கிய வரவு செலவுத்திட்டத்தை வெளிப்படுத்தியிருந்தோம். வரவு செலவுத்திட்டம் என்றால் அவ்வாறே அமைய வேண்டும். நாட்டின் இலக்கை வெளிப்படுத்த வேண்டும், மக்களின் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தில் அவ்வாறு ஒன்றும் இல்லை. நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை. தேசிய உற்பத்தியை கட்டியெழுப்ப எந்த யோசனையும் முன்வைக்கவில்லை. வெறுமனே கனவு மாளிகை திட்டம் மட்டுமே உள்ளது. நாம் உருவாக்கிய வேலைத்திட்டத்தை விற்று ஆட்சி நடத்தவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த நான்கு ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்த ஆட்சி எவ்வாறு என்பதை கூறுகின்றேன்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பிணைகளை சட்ட விரோதமாக மாற்றியமைக்க அப்போதைய மத்திய வங்கி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கி நாட்டுக்கு 10 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தியமை. இலங்கையில் 2001 ஆம் ஆண்டுக்கு பின்னரான நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 வீதமாக தக்க வைத்து தமது இயலாமையை வெளிப்படுத்தியமை. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆசியாவில் வேகமாக வளர்ச்சி கண்ட நாடான இலங்கையில் 2018 ஆம் ஆண்டில் இறுதியான நாடாக அல்லது ஆப்கானிஸ்தான் நாட்டுடன் ஒப்பிடும் அளவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை. மத்திய தர வருமானத்தை பெற்ற எமது நாட்டினை மீண்டும் குறைந்த வருமானம் பெரும் நாடாக மாற்றியமை. கடந்த நான்கு ஆண்டுகளில் வரிச் சுமையை இரண்டு மடங்காக அதிகரித்து மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தி அதனை பாரிய வெற்றியெனவும் மார்தட்டிக்கொண்டமை. நான்கு ஆண்டுகளில் நாட்டின் கடனை ஐந்து ட்ரில்லியன் ரூபாவால் அதிகரித்து 12 ட்ரில்லியன் ரூபாவாக கொண்டு சென்றுள்ளமை. 71 வீதத்தில் இருந்த நாட்டின் வரிச் சுமையை நான்கு ஆண்டுகளில் 90 வீதமாக அதிகரிக்கச் செய்து நாட்டின் கடன் சுமையை அதிகரித்தமை. இலங்கையின் ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்து இதுவரை வரலாற்றில் இல்லாதளவு மோசமான நிலைமையை உருவாக்கியமை. நான்கு ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறி இருந்த வேலைகளையும் பறித்தமை. சர்வதேச முதலீடுகளை கொண்டுவராதும் தேசிய ரீதியில் இருந்த முதலீட்டாளர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றி நாட்டின் வருமானத்தை வீழ்த்தியமை. சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து இலங்கையின் வியாபாரத்தை நாசமாக்கி யமை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று அந்த கடனை சீனாவுக்கு கொடுத்து கடனை அடைக்காது அதனையும் களவெடுத்து மேலும் எம்மை கடனில் தள்ளியமை. இவ்வாறே கடந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சியை கொண்டு நடத்தினர். ஆகவே, இவ்வாறான ஆட்சியையே இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு நடத்தி மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்கியது போதும். ஆகவே இனியும் இந்த ஆட்சிக்கு இடமளிக்க வேண்டாம். நாம் பொறுத்தது போதும். ஆகவே இந்த ஆட்சியை வீழ்த்த சகல தரப்பின் ஒத்துழைப்புகளை தாருங்கள். ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களின் ஆதரவையும் தாருங்கள் என்றார்.
-Vidivelli