வலதுசாரி பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் சமயச் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது இலக்கு வைக்கப்பட்டு பாகுபாடு காட்டப்படுகின்றது என இந்தியாவிலுள்ள முஸ்லிம் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது.
கடந்த வியாழக்கிழமை இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்தியாவின் பொபியுலர் புரொண்ட் அமைப்பின் தலைவர் ஈ.அபூபக்கர், சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சாதகமாகப் பதிலளித்து தமது அரசியல் விஞ்ஞாபனங்களில் அந்த சமூகத்தின் கோரிக்கைகளை உள்ளடக்க வேண்டும்
எனக் கேட்டுக்கொண்டார். எதிர்வரும் மே மாதம் இந்தியாவில் போதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நிலைவரம், சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக முஸ்லிம்களின் கவலைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான அரசியல் மாநாடொன்றை இந்தியாவின் பொபியுலர் புரொண்ட் அமைப்பு நடத்தியது.
முஸ்லிம் சமூகம் தொடர்பான அபிவிருத்தி, பிரதிநிதித்துவம், கல்வி, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு விடயங்களை உள்ளடக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குறித்த மாநாடு முடிவடைந்தது.
சிறுபான்மை வாக்குகள் அதிகம் காணப்படுகின்ற 100 தொகுதிகளில் துண்டுப் பிரசுர விநியோகம், மக்கள் சந்திப்புக்களை நடத்தி தீவிர பிரசாரங்களில் ஈடுபட தமது அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாகவும் அபூபக்கர் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை மாற்றுவதே சிறுபான்மையினரின் விருப்பமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli