பாராளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. தற்போது வரவு – செலவுத்திட்ட விவாதம் நடைபெற்று வருகிறது. மக்கள் நிவாரணங்கள் நிறைந்த வரவு–செலவுத்திட்டமொன்றினையே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்புகள் கானல் நீராகிவிட்டது என்றே கூற வேண்டும்.
வரவு – செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் மாத சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு பாதுகாப்பு படையினருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் எவ்வித குறைப்புகளும் இடம்பெறவில்லை. நாடு தொடர்ந்தும் கடன் சுமைக்குத் தள்ளப்பட்டுள்ளதேயன்றி வரவு – செலவுத் திட்டத்தில் மக்கள் நலன்கருதிய திட்டங்கள் எதுவும் இல்லையென மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
வரவு – செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்போம் என எதிர்க்கட்சி சூளுரைத்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதிக்கான வரவு–செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுகளுக்கு எதிர்த்து வாக்களிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
1977 ஆம் ஆண்டுகளில் ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது என்றாலும், பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இன்று எமது நாட்டின் பொருளாதாரக் கொள்கை என்ன? என்று கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. புதிய நவீன பொருளாதாரம் என்று தெரிவிக்கப்பட்டாலும் நவீன பொருளாதாரமாக தெரியவில்லை. எமது இன்றைய பொருளாதாரம் வரிகள் மூலம் வருமானத்தைத் தேடிக் கொள்வதாக அமைந்துள்ளது. வரிகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளுடன் எம்மால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது.
எமது நாட்டில் இலவசக் கல்வி தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இலவச வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்துச் சேவையும் நடைமுறையில் உள்ளது. இந்தச் சேவைகளுக்காக அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகிறது. இந்தச் செலவனங்களை ஈடு செய்வதற்காகவே மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்படுகிறது. அபிவிருத்தியடைந்துள்ள அநேக நாடுகளில் இவ்வாறான இலவச சேவைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை. அந்நாடுகளின் மக்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாக இருக்கிறது. அவர்களது பொருளாதார நிலை உயர்நிலையில் இருப்பதே இதற்குக் காரணம். அதனால் அவர்கள் அனைத்து சேவைகளையும் பணம் செலுத்தியே பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் எமது நாட்டின் நிலைமை வேறு. எமது மக்களின் பொருளாதார நிலைமை கீழ் மட்டத்திலேயே இருக்கிறது. அதனாலே அவர்கள் நிவாரணங்களை எதிர்பார்க்கிறார்கள். நிவாரணங்களுடன் கூடிய வரவு – செலவுத்திட்டத்தையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனால் மக்களுக்கு நாம் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை இலவசமாகவே வழங்குகிறோம். அதற்குப் பெருமளவு நிதியை செலவிடுகிறோம். இதனாலே வரிகள் விதிக்க வேண்டியுள்ளது என நாட்டின் நிதியமைச்சர் கூறுவாரென்றால் அது அவரின் இயலாமையை பறைசாற்றுவதாகவே அமையும்.
நாட்டின் வருமானத்தை அதிகரித்து வரவு – செலவுத்திட்டத்தில் கூடியதொகை துண்டு விழாது கொள்கைகளை வகுப்பது நிதியமைச்சரின் பொறுப்பாகும். மக்கள் ஏன் நிவாரணங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் இது தொடர்பில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. அவ்வாறு சிந்திப்பார்கள் என்றால் மக்கள் மீது இந்தளவுக்கு வரி சுமத்த மாட்டார்கள்.
நாங்கள் பாரிய கடன் சுமையில் இருக்கிறோம் என்பது உண்மை. வரலாற்றில் அதிகளது கடன் செலுத்த வேண்டியவனாக அமைச்சர் என்ற வகையில் நான் இருக்கிறேன்.
1640 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் 80 வீதம் மஹிந்த ராஜபக் ஷ பதவிக்காலத்தில் பெற்றுக் கொண்ட கடன்களாகும். 6 பில்லியன் டொலர்கள் இந்த வருடம் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் 2 பில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுவிட்டது. இன்னும் 4 பில்லின் டொலர் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எதிர்வரும் இரு வருடங்கள் மிகவும் சுமை கூடிய வருடங்களாகும். கடனை எவ்வாறு செலுத்துவது என்று நாங்கள் இப்போதிலிருந்தே திட்டமிடுகிறோம். கடன் செலுத்தப்படாவிட்டால் முழு நாடும் ஸ்தம்பித்து போய்விடும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்திட்டங்கள் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அமைய வேண்டும். தேர்தலை இலக்காகக் கொண்டதாக அல்லது மேல் மட்ட வர்க்கத்தினருக்குப் பயன்தரும் வகையிலான வரவு –செலவுத்திட்டம் நாட்டினை தொடர்ந்தும் கடன் சுமைக்கே தள்ளிவிடும்.
-Vidivelli