கல்முனை பிரதேச செயலகம் குறித்த பிரச்சினையில் முஸ்லிம் – தமிழ் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்வுகளை எட்டவே முயற்சிக்கின்றோம். இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாகத் தீர்வு காணத் தயாராக இருப்பதாகவும், பிரதமர் தலையிட்டு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கல்முனை பிரதேசம் தனியான தமிழர் செயலகமாக மாற்றப்பட வேண்டும் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பேசப்பட்டுவரும் விடயம். இந்த விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென்ற காரணத்தை கருத்திற்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் துரதிஷ்டவசமாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது இவ்விடயத்தில் தவறுதலான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படாத வகையில் தீர்க்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாம் முயற்சித்து வருகின்றோம். கல்முனை பிரதேச சபையில் தமிழ் செயலகம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை. இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாளத் தயாராக உள்ளோம். அடுத்த வாரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli