இலங்கையின் வரலாற்றுப் புராதனச் சின்னங்களை வெளிநாட்டினரும் புகைப்படம் எடுக்கவே செய்கிறார்கள். உள்நாட்டு உயர்கல்வி மாணவர்களும் தமது அறிவியல் தேடலின் பொருட்டு இதைச் செய்கிறார்கள். எனினும் அண்மையில் இருமுறை சில முஸ்லிம் மாணவர்கள் தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்கள். தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது. எனினும் கூட இதில் பின்வரும் அணுகுமுறை வேண்டும்.
1) இலங்கையில் எங்கெல்லாம் வரலாற்றுப்புராதன சின்னங்கள் இருக்கின்றன என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
2) அவற்றுக்கான பெயர் பலகைகள் பல்வேறு மொழிகளிலும் காணப்படுவதோடு நிபந்தனைகளும் அவ்வாறே காணப்பட வேண்டும்.
3) குற்றவாளியின் தாய்மொழியிலேயே விசாரிக்கப்பட்டும் பதிவும் தாய்மொழியிலேயே நிகழ்ந்து வாசிக்க வைக்க வேண்டும்.
4) மாணவர்கள் விளையாட்டுப் பருவத்தைச் சேர்ந்தவர்கள் முன் பின் அனுபவமற்றவர்கள் பயமுறுத்தி அச்சப்படுத்தினால் அவர்கள் உளறவும் கூடும் குற்ற ஒப்புதல் பெறவும் கூடாது. பள்ளிவாழ்வு பாழ்படவும் சமூக வாழ்வில் அவமானப்படவும் நேரலாம். எனவே திட்டமிட்டே அவர்கள் செய்தார்கள் எனும் முடிவுக்கு வந்துவிடாமல் விஷயம் கையாளப்பட வேண்டும்.
5) இதற்கான அடிப்படைக் காரணம் இதுவேயாகும். சிங்கள மக்கள் தமது மூதாதையரின் வழியில் பரம்பரையாக முஸ்லிம்களோடு வைத்திருக்கும் பேரன்பை இன்றளவும் கைவிடவில்லை என்பதே உண்மையாகும். பின்வரும் சமீபத்திய நிகழ்வுகள் மூலம் இதை எண்பிக்கலாம்.
6) 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஞானசாரதேரர் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தியபோது சில பிக்குகளும் சில பேரினவாத சிங்களவருமே அவரை ஆதரித்திருந்தார்கள். காரணம் தொன்றுதொட்டு அன்றைய முஸ்லிம்கள் மீது சிங்களப் பெரும்பான்மை மக்கள் கொண்டிருந்த அபிமானமேயாகும். இவர்கள் ஞானசாரதேரர் மீதுதான் குற்றம் குறை கூறியிருந்தார்கள். இது பற்றி ஞானசார தேரரே பிரலாபித்திருந்தார். அதனால் தான் அவர் நான் பாரம்பரிய முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. அடிப்படைவாத முஸ்லிம்களையே எதிர்க்கிறேன் எனக் கூறியிருந்தார். அந்த அளவுக்கு இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர் பெரும்பான்மை சிங்கள மக்களின் நம்பிக்கையைப் பெற்று இணக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
7) முஸ்லிம் மூதாதையரின் சிறப்பான செயற்பாடுகள் இன்றளவும் எந்த அளவுக்குக் கண்ணியப்படுத்தப்படுகின்றன என்றால் தற்போது சில முஸ்லிம்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டிக்கும் நிலையிலும் கூட முஸ்லிம்களுடனான தமது அபிமானத்தை இன்றளவும் சிங்கள மக்கள் பேணிக்கொண்டே இருக்கிறார்கள்.
8) தற்போது போதைப் பொருள் வர்த்தகத்திலும் கூட சில முஸ்லிம்கள் ஈடுபடுவது தெரிந்தும் கூட முஸ்லிம்களுடனான அபிமானத்தை சிங்கள மக்கள் குறைத்துக் கொள்ளவில்லை.
9) சில முஸ்லிம்கள் ஆயுத சேகரிப்பில் ஈடுபட்டதாக அறிந்தும் கூட சிங்கள மக்கள் அபிமானத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
10) சில புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட செய்தி கிடைத்தும் கூட இந்த அபிமானம் மாறவில்லை.
எனினும் இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர் ஈட்டித்தந்த உயர்வான நற்பெயரை இன்றைய தலைமுறை படிப்படியாக இழந்து கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். உண்மையில் தமது முன்னோரின் மகத்தான அருங்குணங்களைப் பேணுவதே தற்போது நாட்டிலுள்ள அரசியல் சூழலில் முஸ்லிம்களுக்குத் தக்க பாதுகாப்பு அரணாகும்.
தமது மூதாதையர் முன்மாதிரி காட்டித்தந்த இந்த வழிமுறைக்கு மாறாக இன்றைய தலைமுறை முஸ்லிம்கள் வாழ்ந்து வருவார்களாயின் படுகுழியில் வீழ்ந்தது போன்ற நிலைக்கு ஆளாகி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒல்லாந்தப் படையிடம் அகப்பட்டு விடாமல் சில முஸ்லிம் வியாபாரிகளை சிங்கள மக்கள் காடுகளுக்கூடாக அழைத்து வந்து குடியேற்றியதே தற்போதைய நாம்புளுவைக் கிராமமாகும். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கண்டி வாழ் சில சிங்களக்குண்டர்கள் கொழும்பு வரை முஸ்லிம்களைத் தாக்கி வந்தபோது அவர்களில் சிலர் பஸ்யாலையிலிருந்து நாம்புளுவைக்குத் திரும்ப முயன்றபோது அவர்களைத் தமது இனம் என்றும் பாராது பஸ்யாலை வாழ் சிங்கள மக்களே விரட்டியடித்து நாம்புளுவை முஸ்லிம்களைக் காப்பாற்றினார்கள். எனினும் 1915 ஆம் ஆண்டில் இத்தகைய நல்லுறவு இல்லாமற் போனதால்தான் சிங்கள மக்கள் முஸ்லிம்களை தாக்கியிருந்தார்கள். இதை நாம்புளுவை முபாரக் ஆசிரியர் தனது நூலில் பதிவிட்டிருந்தார்.
அப்போது ஆங்கிலேயரின் ஆட்சியிருந்ததால் அவசரகால சட்டத்தின் மூலமும் இராணுவ சட்டத்தின் மூலமும் சிங்களக் குண்டர்கள் ஒழிக்கப்பட்டார்கள். தற்போது ஆட்சி அதிகாரம் சிங்கள மயமாகவும் பாதுகாப்பு துறை 100 வீதம் சிங்கள மயமாகவும் இருக்கையிலும் கூட நாடு முழுக்கப் பரவலாக சிதறி சிறு சிறு குழுவினராக வாழும் முஸ்லிம்கள் தப்பிப்பிழைத்து வாழக்காரணம்.
முஸ்லிம் மூதாதையரின் அருங்குணங்களும் சீரிய நடத்தைகளுமாகும். இலங்கையின் பண்டைய பொருளாதாரம் விவசாய பொருளாதாரமாகும். இது முஸ்லிம்களின் மூலதனத்திலேயே தங்கியிருந்தது. இதனால் முஸ்லிம்களுக்கு சிங்களவரிடம் பெருமதிப்பு இருந்தது. பின்பு ஏற்றுமதி, இறக்குமதி கலந்த வர்த்தகப் பொருளாதாரம் உருவான பிறகே போட்டி நிலை உருவாகியது. தற்போது குற்றவாளிகளின் பெயர்களை பத்திரிகைகள் வெளியிடுகையில் முஸ்லிம்களின் பெயர்களும் அடிக்கடி காணப்படுகின்றன. இது துவேஷம் என நம்மில் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். முஸ்லிம்களின் பெயர்களை இப்படி அப்பட்டமாக வெளிக்காட்டலாமா? எனவும் வினவுகின்றனர். இவ்வாறு ஏற்பட என்ன காரணம் என்பதை நாம் ஆராய்ந்தால்தான் உண்மை துலங்கும்.
1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்கள் ஏனைய இனங்கள் மத்தியில் கௌரவமாகவும் மிக மரியாதையாகவும் வாழ்ந்திருக்கின்றனர். நமது மூதாதையர் எவரும் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல பைபளில் சத்தியம் செய்ய வேண்டியிருக்கவில்லை. கொடுக்கல் வாங்கல்களில் 100 வீதம் முஸ்லிம்களின் மூதாதையர்கள் நேர்மையாகவே வாழ்ந்திருந்தார்கள்.
நாடு முழுக்க உள்ள முஸ்லிம் கிராமங்கள் எப்படி உருவாகின? வர்த்தகத்துக்கு விவசாயமும் தோட்டக் கைத்தொழிலும் வெளிநாட்டுச் சஞ்சாரமும் தேவைப்பட்டன. இதனால்தான் முஸ்லிம்கள் நாடு முழுக்கப் பரவலாகக் குடியேறினர். நீருள்ள இடங்களில் விவசாயிகளும் கடலுள்ள இடங்களில் மீனவர்களும் குடியேறியது போன்றே வர்த்தக வாய்ப்புள்ள இடங்களில் எங்கும் முஸ்லிம்கள் குடியேறியிருந்தனர். அதுவும் முஸ்லிம்கள் எங்கும் வலுக்கட்டாயமாகக் குடியேறியிருக்கவில்லை. விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் மீனவர்களுக்கும் மளிகை மற்றும் தட்டுமுட்டு சாமான் கொள்வனவுக்கும் முஸ்லிம் வியாபாரிகள் தேவைப்பட்டதால் முஸ்லிம்கள் பரவலாகக் குடியமர ஏனைய சமூகங்கள் ஒத்துழைப்பு வழங்கின. கடல் வாணிபத்துக்காக முஸ்லிம்கள் மரக்கலங்களும் வைத்திருந்தனர். மரக்கல எனும் பெயர் இதையே குறிக்கின்றது. மரைக்காயர் எனும் பெயரும் வந்தது. தற்போதுள்ளது போல திறந்த பொருளாதாரமோ இதற்குமுன் காணப்பட்ட வர்த்தகத்தோடு விவசாயமும் கலந்த கலப்புப் பொருளாதாரமோ அப்போது இருக்கவில்லை. விவசாய பொருளாதாரமே இருந்தது. அப்போது முஸ்லிம் வர்த்தகர்களே அதற்கான பொருளாதார நிறைவை செய்தளித்தனர். பணப்பரிமாற்றத்தை முஸ்லிம்களே நாடுமுழுக்கப் பரவலாக்கினர். அதற்கு முன் பண்டப்பரிமாற்றமே காணப்பட்டது. அதாவது ஒரு பொருளைக் கொடுத்து அதே பெறுமதிற்கு ஏற்ப இன்னொரு பொருளைப் பெற்றுக் கொள்வதாகும்.
விவசாய மற்றும் தோட்ட உற்பத்திக்கு ஆகக்குறைந்த இலாபத்துக்காக முதலீடுகளை வழங்கி நியாயமான விலைகளில் கொள்முதல் செய்து கிராமங்கள் தோறும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஏற்றிச்சென்று முஸ்லிம் வியாபாரிகள் விற்பார்கள். இதை தவளம என்பார்கள். முஸ்லிம்கள் கொள்முதல் பொருட்களை சேமித்து வைக்கும் இடமே மடிகே எனக்கூறப்பட்டது. இத்தகைய இடங்களை இன்றும் காணலாம்.
முஸ்லிம் வியாபாரிகளின் போக்குவரத்து வசதிக்காகவே கிராமங்கள் தோறும் அக்காலத்தில் மண்வீதிகள் போடப்பட்டன. முஸ்லிம் ஏற்றுமதி, இறக்குமதி மொத்த வியாபாரிகளின் பொருளுதவியாலேயே பிரதான தார்வீதிகள் போடப்பட்டன. கிராமங்கள் தோறும் நடந்து போய் மளிகை மற்றும் வீட்டு தட்டுமுட்டு சாமான்களை காவிக்கொண்டு விற்ற முஸ்லிம்களே பல்பொடி, சவக்காரம், சீப்பு, கண்ணாடி, செருப்பு, கத்தி, பிளேட், நெருப்பு பெட்டி, சட்டை, சாரி, கோப்பி, தேயிலை, சீனி, கொச்சிக்காய்த் தூள், கொத்தமல்லித் தூள், அரிசி, பழவர்க்கம், மரக்கறிவகைகள், கத்திரி, கோடாரி, அரிவாள், சவரக்கத்தி, அடுப்பு, கூடை, விளக்கு, மெழுகுவர்த்தி, புளி, கொரக்காய், உப்பு, கடுகு, மிளகு, ஏலம் ஆகியவற்றோடு மேலும் பல பொருட்களையும் காவிச்சென்று விற்பார்கள். கிராமிய மக்கள் அன்றாடம் இவர்களை வழிபார்த்து நிற்பார்கள். முஸ்லிம் வியாபாரிகள் தாராளமாக பண உதவி செய்வார்கள் கடனும் கொடுப்பார்கள். தம்மிடம் முதலீடு பெற்றவன் விவசாயத்தில் நஷ்டமுற்று விட்டால் முஸ்லிம் வியாபாரிகள் கொடுத்த பணத்தைத் திருப்பித்தர வேண்டாம் எனக் கூறிவிடுவார்கள்.
குறிப்பாக நமது மூதாதையர் யாவருமே அப்போது நற்குணசாலிகளாகவும் பண்பாடுள்ளவர்களாகவுமே திகழ்ந்தார்கள். பெரிய படிப்பு படிக்காதிருந்த போதும் பொருளீட்டுவதில் அதிக ஈடுபாடுள்ளவர்களாக இருந்தார்கள். கொலை, கொள்ளை, காமம், மது, சூது, பொய், வஞ்சகம், சண்டை, சச்சரவு, பெருமை, பொறாமை, உலோபித்தனம், சதி ஆகியன இருக்கவில்லை.
இத்தகைய அருங்குணங்களால் அக்காலத்திய இந்நாட்டு மக்கள் முஸ்லிம்களின் விடயத்தில் பேரன்பையும் பெருமதிப்பையும் வைத்திருந்தார்கள். பொலிஸில் யாரேனும் அகப்பட்டுவிட்டால் ஒரு முஸ்லிம் போய் சொன்னால் அவர் விடுதலையாகி விடுவார். தற்போதும் கூட சில கிராமங்களில் சிங்களவர்கள் முஸ்லிம்களை முதலாளி முதலாளி என அழைப்பதைக் காணலாம்.
இருதரப்பினருக்கும் மத்தியில் அக்காலத்தில் பிரச்சினை ஏற்படுமாயின் ஒரு முஸ்லிமால் அதில் தலையிட்டுத் தீர்த்து வைக்க முடியும். அந்த அளவுக்கு நாட்டின் சமாதானக் காவலர்களாகவே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி எல்லா குற்றங்களிலும் முஸ்லிம்கள் பரவலாக ஈடுபட்டு சிறைகளில் அதிக எண்ணிக்கையாக அடைபட்டிருக்கிறார்கள். தினசரி நீதிமன்றங்களில் அதிக முஸ்லிம் கைதிகளின் பெயர்கள் அழைக்கப்படுகின்றன. இது ஊடகங்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் அதிசயிக்கத்தக்க விடயமாகவே இருக்கிறது. அவை இதை வெளியிடுவது குறித்தும் ஏனைய சமூகத்தினர் இதை அவதானிப்பதைக் குறித்தும் முஸ்லிம்கள் வெட்கப்படுவதை விடுத்து எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
- பள்ளிவாசல்களுக்கான நம்பிக்கையாளர் சபைத் தேர்விலும் சச்சரவு நீதிமன்றில் வழக்காடல்.
- பள்ளிவாசல்களில் அதிகார இழுபறி வருடாந்த கணக்கறிக்கையில் தில்லு முல்லு.
- பள்ளிவாசல் கட்டுமானங்களில் மோசடி.
- ஹஜ் முகவர்களின் சூறையாடல்.
- ஸக்காத் நிதி வசூலிப்பில் மோசடி.
- வக்ப் சொத்துக்கள் அபகரிப்பு.
- ஸதகா எனும் தர்ம நிதியத்தின் பெயரால் வசூல்.
- தஃவத்தின் பெயரால் மோசடி– என்றெல்லாம் செய்திகள் ஊடகங்களில் வருமாயின் என்ன செய்வது?
- பொது மையவாடியும் சூறை.
- வாரிசு சொத்திலும் வஞ்சகமும் ஆணாதிக்கமும்.
- காதிநீதிமன்றங்களில் விவாகரத்துகளின் பெருக்கம்.
- தாபரிப்பு வழங்குவதில் பெரும் மோசடி.
- வர்த்தகத்தில் வஞ்சகமும் வட்டியின் ஆதிக்கமும்.
- போதைப்பொருள் பாவனையும் விற்பனையும்.
- சீரழிந்த குடும்பக்கட்டமைப்பு.
இத்தகைய நிலைப்பாடுகளால் ஏனைய சமூகங்களின் மத்தியில் முஸ்லிம்களின் மீதான நல்லபிமானங்கள் குறைந்து கொண்டே வருவதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது மூதாதையரின் காலத்தில் ஒவ்வொரு பள்ளிவாசலும் அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்தன. எளிய சிறிய கட்டடங்களாயினும் பக்தி மணம் கமழ்ந்தது. இரட்டை வரிசையில் மட்டுமே தொழுவோரின் எண்ணிக்கை இருந்தபோதும் அவர்களின் தொழுகைகளில் உயிரோட்டம் இருக்கவே செய்தது.
வரும்படி குறைவாக இருந்தபோதும் அதில் திருப்தி காணும் பக்குவம் இருந்தது. மோதினாரே பாங்கும் சொல்வார், ஓதியும் கொடுப்பார், தொழுவிக்கவும் செய்வார். இப்னு நபாதாவின் அரபுத்தமிழ் குத்பா கிதாபை வெள்ளிக்கிழமை ஜும்ஆக்களில் வாசிக்கவும் செய்வார். வக்பு பள்ளிவாசல் என்பதால் அதைப் பரிபாலித்துக் கொண்டும் துப்புரவாக்கிக் கொண்டும் விளக்கையும் எரியவிடுவார். யாரேனும் ஹதியாக்கள் கொடுத்தாலன்றி யாவும் இவரது செலவிலேயே நிகழும்.
இலங்கை பல்லினம் வாழுகின்ற பல்வேறு மதங்களுக்கும் உத்தரவாதமுள்ள நாடு எனும் கணிப்பீடே தற்போது மேலெழுந்தவாரியாகக் காணப்படுகின்றது. எனினும் பேரின மத மொழி முன்னுரிமைகளோடு சிறுபான்மைக் காப்பீடான 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களால் எதுவும் ஆகப்போவதில்லை எனும் கணிப்பில் முஸ்லிம்கள் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் முஸ்லிம்கள் 29 ஆம் ஷரத்தை மீட்டு கரையோர மாவட்டத்தையும் பெற்று முஸ்லிம் அலகு பற்றியும் சிந்திக்க வேண்டும். இவற்றை மதியூகமாக செய்ய வேண்டிய நிலையில்தான் சிலை உடைப்பு, ஆயுத சேகரிப்பு, தூபியில் படம்பிடிப்பு எனும் செய்திகள் காதுகளுக்கு எட்டுகின்றன.
- நாடு முழுக்க சிங்கள மக்களே மிகப் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
- முஸ்லிம்கள் சிங்களக் கிராமங்களில் சிறு சிறு தொகையினராக நிலத்தொடர்பின்றி பரவலாக வாழ்கிறார்கள்.
- வாழ்வின் அன்றாடத் தேவைகள் யாவற்றுக்கும் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.
- எல்லாக்கிராமங்களிலும் ஏனையோரே முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினர் எனும் நிலையே காணப்படுகிறது.
- பாதுகாப்புத்துறையில் பெரும்பான்மையினரே 100 வீதம் இருக்கிறார்கள்.
எனவே முஸ்லிம்கள் பொறுப்புடன் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்.
-Vidivelli