அமெரிக்காவில் ஏனைய மதக் குழுவினரை விட முஸ்லிம்களே அதிக பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் என கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
ஹரீஸ்எக்ஸ் என்ற அரசியல் இணையத்தளமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் போது பதிலளித்த 85 வீதமானோர் முஸ்லிம்களே அதிகம் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை 79 வீதமானோர் யூதர்களே அதிகம் பாகுபாட்டிற்குட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
61 வீதமானோர் கிறிஸ்தவர்களே அதிகம் பாகுபாட்டிற்குட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அதேவேளை 55 வீதமானோர் நாத்திகவாதிகளே அதிகம் பாகுபாட்டிற்குட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள், இஸ்லாம் தொடர்பான பீதி, மற்றும் ஏனைய சகிப்புத்தன்மையற்ற வெறுப்புணர்வுக் கருத்துக்களைக் கண்டிக்கும் தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் அங்கீகரிக்கப்பட்ட வாரத்திலேயே இக் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
வெறுப்புணர்வுக் கருத்துக்களைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்மையினை காங்கிரஸின் மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் வரவேற்றுள்ளதோடு அனைத்து கோணங்களிலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்துள்ளனர்.
எமது தேசத்தின் வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புணர்வினைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானமொன்றிற்கு வாக்களித்துள்ளோம் என காங்கிரஸ் பிரதிநிதி இல்ஹாம் ஒமர், றசீதா திலைப் மற்றும் அன்ரே கார்சன் ஆகியோர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸின் முஸ்லிம் பிரதிநிதியான இல்ஹாம் ஒமர் இஸ்ரேலை விமர்சித்ததையடுத்து விமர்சகர்கள் வெகுண் டெழுந்ததன் பின்னணியில் வெறுப்புணர்வுக் கருத்துக்களைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli