அண்மையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டிலிருந்து இரு நாடுகளும் தம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை சீனா இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்தது.
பீஜிங்கில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சீன வெளிநாட்டமைச்சர் வேங் இயி ‘புதுடில்லியும் இஸ்லாமாபாத்தும் விரைவாக தமது புத்தகங்களின் பக்கங்களைப் புரட்ட வேண்டும். தற்போதைய பதற்றமான சூழலை நீண்டகால அபிவிருத்திக்கு ஏற்றவாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்ததாக இந்தியாவின் பீ.ரீ.ஐ செய்தித் தாபனம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானும் இந்தியாவும் நெருக்கடி நிலையினை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் எனவும் இரு நாடுகளும் இடைநடுவில் சந்தித்துக்கொள்ளும் என சீனா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனாவின் பிரதி வெளிநாட்டமைச்சர் கொங் ஸுவான்யூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான பதற்றநிலை தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவெட் பஜவா ஆகியோருடன் கலந்துரையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ததையடுத்தே சீன வெளிநாட்டமைச்சரின் இக் கருத்து வெளியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மத்திய ரிசேவ் பொலிஸ் படையினரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியொன்றின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரினை காஷ்மீர் கிளர்ச்சிக்காரர்கள் கொண்டு சென்று மோதி தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றநிலை தீவிரமடைந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆந் திகதி பாகிஸ்தானின் பகுதியில் விமானத் தாக்குதலை நடத்திய இந்தியா பெரும் எண்ணிக்கையிலான ஜாயிஷ் – இ – மொஹம்மட் அமைப்பினைச் சேர்ந்தவர்களைக் கொன்றதாக உரிமை கோரியது. பெப்ரவரி 14 ஆந் திகதி நடத்தப்பட் தற்கொலைத் தாகுதலுக்கு ஜாயிஷ் – இ – மொஹம்மட் அமைப்பே காரணம் என இந்தியா குற்றம்சாட்டி வந்தது.
எனினும், மறுநாள் காலை இதற்கு பதில் நடவடிக்கை மேற்கொண்ட பாகிஸ்தான் விமானப்படை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரு ஜெட் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதோடு ஒரு விமானியையும் கைது செய்தது. பின்னர் மார்ச் 01 ஆந் திகதி குறித்த இந்திய விமானி சமாதானத்திற்கான நல்லெண்ண சமிக்ஞையாக இந்தியாவி டம் ஒப்படைக்கப்பட்டார்.
சீனா ஆரம்பத்திலிருந்தே பதற்றநிலை அதிகரிக்காதிருக்க வேண்டியதன் அவசியத்தையும், பேச்சுவார்த்தைகள் மூலம் முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதாகவும், பீஜிங் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்திற்கான ஏற்பாட்டாளராக செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே நாடுகளின் இறைமையும், ஆள்புல ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் எனவும் சீன வெளிநாட்டமைச்சர் வலி யுறுத்தினார்.
-Vidivelli