முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்தும் நடமாடும் சேவைகளினூடாகப் பெற்றுக்கொள்ளப்படும் அரபு மத்ரஸாக்கள், தக்கியாக்கள் மற்றும் பள்ளிவாசல்களின் பதிவுகள் தொடர்பான விண்ணப்பங்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக உடனடியாக வக்பு சபைக்கு அனுப்பிவைக்குமாறு வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ். எம். எம். யாஸின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரபு மத்ரஸாக்கள், தக்கியாக்கள் மற்றும் பள்ளிவாசல்களைப் பதிவுசெய்வதற்கான ஆவணங்களைப் பரிசீலித்து அவற்றை உடனடியாகப் பதிவுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவை வக்பு சபையில் பதிவு செய்யப்படாது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாஸின் தெரிவித்தார்.
அரபுக் கல்லூரிகளும் பள்ளிவாசல்களும் வக்பு சபையில் பதிவுசெய்யப்பட்டாலே எதிர்காலத்தில் வழங்கப்படும் அரச உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி வக்பு சபையின் அமர்வு நடைபெறவுள்ளது. அவ்வமர்வில் நடமாடும் சேவையின்போது சேகரிக்கப்பட்ட அரபுக்கல்லூரிகள் மற்றும் பள்ளிவாசல்களின் பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். பள்ளிவாசல்களில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார்.
இதேவேளை உடுநுவர, யடிநுவர தேர்தல் தொகுதிகளுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நடமாடும் சேவை கடந்த 2 ஆம் திகதி தவுலகல – வஹங்கே அல்– அறபா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 30 ஆம் திகதி ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதிக்கான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நடமாடும் சேவை அக்குறணை அல் –அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இடம் பெறவுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலு வல்கள் திணைக்களம் நாடு தழுவிய ரீதியில் நடமாடும் சேவைகளை நடத்தி அரபுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிவாசல்களின் பதிவுகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினை களுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளது.
-Vidivelli