2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித்திட்டங்களின் பயன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஐ.தே கட்சியும் ஐக்கிய தேசிய முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய ஜனநாயக கூட்டமைப்புடன் ஒன்றிணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அறைகூவல் விடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிகொத்தவை கிராமத்துக்குக் கொண்டுசெல்லும் வேலைத்திட்டத்தை நேற்று பாணந்துறை தொடவத்த பகுதியில் ஆரம்பித்து அங்கு உரையாற்றுகையிலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
தற்போதைய அரசாங்கம் என்ன செய்து விட்டது என சிலர் கேள்வியெழுப்புகிறார்கள். குறுகிய காலத்துக்குள் நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்வதற்கு நாடெங்கும் பாரிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
சிறிகொத்தவை கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளில் செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிய, அவர்களது பிரச்சினைகளை இனம்காண பிரதமர் ஒவ்வோர் பகுதிகளுக்கும் நேரில் விஜயம் செய்தார். வீதிகளின் இருமருங்கிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கும் விஜயம் செய்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்நிகழ்வில் ஐ.தே.கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உபதலைவர் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அமைச்சர்கள் லக் ஷ்மன் கிரியெல்ல, நவீன் திசாநாயக்க, ராஜித சேனாரத்ன, அஜித் பி பெரேரா, பிரதியமைச்சர் பாலித தேவர பெரும உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் 2015 இல் பதவிக்கு வந்து மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கும் அழிவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தோம். எமது அரசாங்கம் என்ன செய்து விட்டது என சிலர் கேட்கிறார்கள். நாம் செய்தவைகளை கூறித்திரிய விரும்பவில்லை. மௌனமாகவே பணிகளை முன்னெடுத்தோம். அவற்றின் பயன்களை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர். இந்நிலையில் எமது பணிகளைத் தொடர அனைவரும் எம்முடன் இணையுமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.
-விடிவெள்ளி