ஞானசாரர் செய்யாத குற்றத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம். கொலைக்குற்றம் இழைத்தோ, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோ ஞானசாரர் சிறை செல்லவில்லை. மாறாக 30 வருடகால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகளை சிறையிலடைப்பதற்கு எதிராகவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என ‘சிங்களே அபி” அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்தரத்ன தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியாமற்ற வகையிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் 50 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் செயற்பாட்டை பொதுபலசேனா அமைப்பு நேற்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆரம்பித்திருந்தது.
ஞானசாரர் செய்யாத குற்றத்திற்காகவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றோம். குறித்தவொரு வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது எனும் பட்சத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யும் உரிமை அனைத்துப் பிரஜைகளுக்கும் உண்டு. ஆனால் அதனை உரியவர்களிடத்தில் முறைப்பாடு செய்ய முடியாமையின் காரணமாகவே மக்களிடத்தில் இதனை தெளிவுபடுத்துகின்றோம்.
தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு அமைவாக செயற்பட்டு வருகின்றதொரு நிலையே உள்ளது. அதனால் சமூகத்தின் நன்மைக்காக செயற்படுகின்றவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். அத்தகைய ஒருவர்தான் ஞானசார தேரர். அவர் செய்யாத குற்றத்திற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதை நிரூபிப்பதற்கு போதியளவான சாட்சிகள் எம்மிடம் உள்ளன.
ஞானசாரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ள போதிலும், அவ்வாறு விடுவிக்கப்படவில்லை எனின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யவும் தயாராகவே இருக்கின்றோம். கொலைக்குற்றம் இழைத்தோ, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோ ஞானசாரர் சிறை செல்லவில்லை. மாறாக 30 வருடகால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகளை சிறையிலடைப்பதற்கு எதிராகவே அவர் குரல் கொடுத்தார். வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு திட்டமிடப்படுகின்றது என்ற தகவல்களின் ஊடாக யுத்தத்தை வென்றெடுத்தவர்களை சிறையிலடைக்கும் செயற்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன என்பது புலனாகின்றது. எனவே, நாட்டு மக்கள் அனைவரும் ஞானசார தேரரை மீட்கும் நடவடிக்கைக்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.
-Vidivelli