பலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவின் இராணுவப் பிரிவான அல்-–கஸ்ஸாம் படையணியின் மேற்குக் காஸாவிலுள்ள இராணுவ காவலரண்கள் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியதாக கடந்த செவ்வாய்கிழமை சம்பவத்தை நேரில்கண்டோர் தெரிவித்தனர்.
இஸ்ஸதீன் அல்-–கஸ்ஸாம் படையணியின் காவலரண் மீது ஜெட் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர்கள் உயிர்ச்சேதங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.
எரியும் தன்மை கொண்ட பலூன்களை இஸ்ரேலினுள் பறக்கவிட்டமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் மேற்கொளப்பட்டதாகத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவத் தரப்பு, காஸாவில் என்ன நடந்தாலும் அதற்கு ஹமாஸே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பலஸ்தீனத் தரப்பிலிருந்து எவ்விதத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் இரண்டு உலங்கு வானூர்திகள் கிழக்கு காஸா பள்ளத்தாக்கிலுள்ள இரண்டு ஹமாஸ் காவலூரண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீன ஆள்புலப் பிரதேசத்திலிருந்து இஸ்ரேல் பகுதியினுள் எரியும் தன்மை கொண்ட பலுன்களை பறக்கவிட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா–இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக பலஸ்தீனப் பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி எரியும் தன்மை கொண்ட பலூன்கள் மற்றும் பட்டங்கள் பறக்க விடப்படுகின்றன.
-விடிவெள்ளி