சர்வதேச சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்தை மீறும் வகையில் செயற்பாட்டாளர்களை மௌனிக்கச் செய்வதற்காக சவூதி அரேபியா பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்திற்கு ஒருங்கிசைவாக கடந்த திங்கட்கிழமை சவூதி அரேபியா – பொறுப்புக் கூறுவதற்கான தருணம் என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
சவூதி அரேபியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் மிகவும் பரந்து விரிந்தவை என்பதோடு புரிந்துகொள்ள முடியாத சிக்கல்களையும் கொண்டவையாகுமென பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அதேவேளை மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையாளரான பியன்னுஆலா நியி அஓலயின் தெரிவித்தார்.
இந்தச் சட்டங்கள் முன்னணி மனித உரிமைக் காவலர்கள், சமயப் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை நேரடியாகத் தாக்குபவையாகவும், உரிமைகளை மட்டுப்படுத்துபவையாகவும் காணப்படுகின்றன. அத்துடன் இவ்வாறான அனைத்துக் குழுக்களும் இந்த சட்டங்களினால் இலக்கு வைக்கப்படுகின்றன என நியி அஓலயின் மேலும் தெரிவித்தார்.
றியாத் நடவடிக்கைகளை ஆரம்பித்ததிலிருந்து கடந்த ஒரு வருட காலமாக தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக மனித உரிமைக் காவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையாளரான மைக்கல் பொரெஸ் தெரிவித்தார்.
எனக்கு மிகவும் கவலையளித்த விடயம் என்னவென்றால் மனித உரிமைக் காவலர்களான பெண்கள் இலக்கு வைக்கப்பட்டமையாகும் எனத் தெரிவித்த அவர், கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்புகொள்ள முடியாத இரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய சவூதி அரேபியாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் அப்துல் அஸீஸ் மோ அல்வாசில், சவூதி அரேபியா தனது நடவடிக்கைகளில் மனித உரிமைகள் விடயத்தில் அனைத்து சர்வதேச மற்றும் தேசிய நியமங்களுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்தார்.
-Vidivelli