இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவுறுவதற்கு இடையில் எதிர்வரும் எட்டு மாதங்களுக்குள் இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளுக்கென புதிய ஹஜ் சட்ட மூலம் நிறைவேற்றிக் கொள்ளப்படும். சட்ட வரைபில் அனைத்து தரப்பினரதும் சிறந்த ஆலோசனைகள் உள்வாங்கப்படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் தன்னைச் சந்தித்த வை.எம்.எம்.ஏ. பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
நேற்றுக்காலை வை.எம்.எம்.ஏ.யின் தேசிய தலைவர் எம்.என்.எம். நபீல் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் சஹீட் எம். ரிஸ்மி உள்ளடங்கிய குழுவினர் அமைச்சர் ஹலீமை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து ஹஜ் சட்ட மூலத்துக்கான உத்தேச வரைபொன்றினை அமைச்சரிடம் கையளித்தனர்.
வை.எம்.எம்.ஏ.யின் ஹஜ் சட்ட வரைபினைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
எமது நாட்டில் ஹஜ் ஏற்பாடுகளுக்கென ஒரு தனியான சட்டம் இன்மையால் ஒவ்வொரு வருடமும் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. கடந்த காலங்களில் ஹஜ் முகவர்கள் நீதிமன்றுக்கும் சென்றார்கள். அதனால் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதற்காகவே ஹஜ்ஜுக்கென சட்டமொன்று நிறைவேற்றிக் கொள்ளப்படவுள்ளது’ என்றார்.
வை.எம்.எம்.ஏ. கையளித்த சட்ட வரைபு தொடர்பில் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். வை.எம்.எம்.ஏ.யின் உத்தேச சட்ட வரைபில் பல முன்னேற்றகரமான விடயங்கள் உள்ளடங்கப்பட்டிருந்தன. வரைபின் பிரதி, அமைச்சின் செயலாளரிடமும் கையளிக்கப்பட்டது.
அரச ஹஜ் குழுவுக்கு 10 பேர் நியமிக்கப்பட வேண்டும். அக்குழுவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்பட வேண்டும். அவரை சபாநாயகரே நியமிக்க வேண்டும். மேலும் ஹஜ் முகவர் சங்கங்கள் இரண்டின் பிரதிநிதிகள் ஒருவர் வீதம் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தேச சட்ட வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய 7 பேரை முஸ்லிம் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நியமிப்பார். இவர்களில் மூவர் துறைசார் நிபுணர்கள் இவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார். 2 மார்க்க அறிஞர்கள், 2 டாக்டர்கள் இருவரில் ஒருவர் பெண் டாக்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்கும் மேலதிகமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நிர்வாக உறுப்பினராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தேச சட்ட வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கும் முறையை ஹஜ் குழுவே தீர்மானிக்கும்.
ஹஜ் முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு ஓர் விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால் ஹஜ் முகவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இவ்விசாரணைக்குழுவுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் மாத்திரமல்ல ஹஜ் முகவர்களும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்பன உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளன.
-Vidivelli