இருண்ட 52 நாட்களின் பின்னர் பொருளாதாரத்தை ஸ்திரமாக்க கடுமையாக உழைக்க வேண்டி ஏற்பட்டது
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தேவையான வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்
2018 இன் இறுதியில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதை நாம் காணலாம். இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்களின் பின்னர் ஸ்திர நிலைமையினை மீண்டும் அடைந்துகொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியேற்பட்டது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.
மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கை நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தொடர்ச்சியான பல வருடங்களாக ஏற்பட்ட பல வரட்சிகளினால் கிராமிய வருமானம் வீழ்ச்சியடைந்து முழுப் பொருளாதாரமும் பாதிப்படைந்த நிலையில் 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வு பொருளாதாரத்தை மேலும் மோசமாகப் பாதித்தது. உலக எண்ணெய் விலை இரட்டிப்பாகியதுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்களை மிக விரைவில் அதிகரித்தது. இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த அதேவேளை, எமது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.
2018 ஒக்டோபர் இறுதியிலிருந்து உலக எண்ணெய் விலையானது பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்களுக்கான சமிக்ஞையினைக் காட்டியதுடன், நுகர்வானது பழைய நிலைமைக்குத் திரும்பியது. இந்நிலைமையினால் இலங்கை பெற்றுக்கொள்ள முடியுமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியினை 2019 வரையில் அனுபவிக்க முடியாது போனது. துரதிஷ்டவசமாக, நாம் அரசியல் சதியொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் மேற்குறித்த நன்மைகளின் விளைவுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை இழந்தோம்.
இலங்கையின் மீதான நம்பிக்கை இழந்ததன் விளைவாக, அந்த 52 நாட்களுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து மூலதன வெளியேற்றம் பாரியளவு இடம்பெற்றதுடன் மிகவும் கடினமான உழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட எமது வெளிநாட்டு ஒதுக்கீடுகளிலிருந்து பல பில்லியன் டொலர்களை இழக்க வேண்டியேற்பட்டது. இக்காலப்பகுதியில், ஏனைய வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்கள் மதிப்பேற்றமடைந்த அதேவேளை, எமது நாணயத்தின் பெறுமதியானது வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலான வீழ்ச்சியினை பதிவுசெய்தது.
இலங்கையின் கடன் தரப்படுத்தலானது கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எமது வெளிநாட்டுக் கடன் பெறுகைச் செலவினம் இரட்டை இலக்க மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. 2019 இல் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவாக 5.9 பில்லியன் ஐ.அ. டொலரினை மீள் நிதியளிக்க வேண்டியிருப்பதனால் மிகவும் சாதகமற்ற தன்மை உருவாகியுள்ளது. இலங்கை சிறந்த பிரயாணம் செய்யக்கூடிய இடமாக “லோன்லி பிலனற்” சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட, அப்போது காணப்பட்ட அரசியல் நிலமையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையை நிவர்த்திசெய்யும் பொருட்டு புதிய பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நிலைமை இவ்வாறிருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தோம். எமது வெளிநாட்டுத்துறைக் காரணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தினை நாம் தற்பொழுது சீர்படுத்தியுள்ளதுடன் சந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் மீள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று எமது வெளிநாட்டுக் கடன் பெறுகை செலவினமானது 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது. எமது பொருளாதாரத்தினை நோக்கி வெளிநாட்டு மூலதனமானது நகர்ந்துள்ள அதேவேளை, ஜனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றமடைந்துள்ளது.
எனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றார்.
அத்துடன், அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 2500 ரூபா மேலதிகமாக வழங்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மேலும், 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு 2020 ஆண்டு வரையில் 5 கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. இதேபோன்று சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைய சம்பள முரண்பாடு தீர்க்கப்படும்.
கல்விச் சிறப்புத் தேர்ச்சிக்கான புலமைப் பரிசில் ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பினை மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதன்மூலம் க.பொத. (உ.த.) பரீட்சையில் பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், தொழில் நுட்பம், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவுகளில் உயர் செயலாற்றுகையினைக் காட்டும் மாணவர்கள் தமது பல்கலைக்கழகக் கல்வியினை ஹாவட், எம்.ஐ.ரி., ஒக்ஸ்போட், கேம்ப்றிஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் தொடர்வதற்கு இந்நிதியானது வசதியளிக்கும். இதற்கான முதலாவது தகைமை பெறும் மாணவர் தொகுதியானது 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளிலிருந்து தெரிவு செய்யப்படுவர். இவ்வருடத்தில் தமது துறைகளில் உயர்ந்தபட்ச செயலாற்றுகையினைக் காட்டும் 14 பேருக்கு புலமைப் பரிசில்கள் பெற்றுக் கொடுக்கப்படும். இதன் கீழ் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் உயர்கல்வியின் பின்னர் நாடு திரும்பி 15 வருடங்கள் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும். இப்புலமைப்பரிசிலானது ஏனைய வருடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
எமது நாடு நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற அந்தஸ்த்தினை அடைந்திருக்கும் நிலையில், அதிநவீன, அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பதில் பல மில்லியன்களை முதலீடு செய்து கொண்டிருக்கும் அதேவேளை எமது நாட்டில் சுமார் 260,000 வீடுகள் அடிப்படை துப்புரவேற்பாடுகளற்ற நிலையில் காணப்படுகின்றன. உதாரணமாக அம்பாந்தோட்டை மாவட்டமானது கலிபோர்னியா பாணியில் பாரிய கருத்திட்டங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள், சீன பாணியில் மாநாட்டு மண்டபங்கள் மற்றும் விளையாட்டுத் தொகுதிகள் என்பவற்றைக் கொண்டிருந்த போதிலும் 15,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை துப்புரவேற்பாடுகளற்ற நிலையில் வாழ்கின்றனர். ஆகவே, நாட்டில் காணப்படும் துப்புரவேற்பாடுகளற்ற அனைத்து வீடுகளுக்கும் இரண்டு வருடங்களுக்குள் மலசலகூட வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும். இதன் மூலம் 1 மில்லியன் மக்கள் பயன்பெறுவர். அரச ஊழியர்களின் சீருடைக்காக வழங்கப்படும் கொடுப்பனவு 600 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இராணுவ கமாண்டோ படையினருக்காக மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 1000 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது. இராணுவத்துக்கு சமமான ஏனைய ஊழியர்களுக்கும் இது வழங்கப்படும்.
கிராமபுறங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒருகப் பால் வழங்கப்படவுள்ளது.
ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதற்காக 12,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 85 இலட்சம் பேர் பயனடையவுள்ளனர்.
வரவு செலவு திட்டத்துக்கமைவாக உள்நாட்டு சாராய உற்பத்திகளின் விலைகள் இன்று (நேற்று) நள்ளிரவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. 750 மில்லி லீற்றரைக் கொண்ட சாராயம் 63 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. 350 மில்லிலீற்றர் பியர் போத்தல் 9 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. கள்ளு சாராயத்தின் விலையில் எந்தவித மாற்றமில்லை
60 மில்லிமீற்றர் நீளத்தை கொண்ட சிகரட்டுக்கான வரி 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக பொதுவாக சிகரட்டின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது.
பீடி விலைக்கான செஸ் வரி ஒரு கிலோவுக்கு 2500 ரூபாவிலிருந்து 3500 ரூபா வரையில் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக பீடி ஒன்றின் விலை 50 சதத்தால் அதிகரிக்கப்படுகிறது.
வணக்கஸ்தலங்களில் சூரிய மின்னுற்பத்திக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படவுள்ளன. வணக்கஸ்தலம் ஒன்றுக்கு இதன் கீழ் 3 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.
வரட்சி வலய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக மகளிர் மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி அமைச்சுக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
அனர்த்தத்துக்குள்ளான வீடுகளை புனரமைப்பதற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. இதற்கமைவாக தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வீடுகள் அமைக்கப்படும்.
சமுர்த்தி வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும் 6 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக நேரங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டணம் 100 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பு. கெசினோவில் பிரவேசிப்பதற்கான கட்டணம் 50 டொலர்களாக அதிகரிக்கப்படுகிறது.
விமான பயணிகள், கப்பல் பயணிகளுக்கான விமான நிலையங்களில் அறவிடப்படும் கட்டணம் 10 அமெரிக்க டொலர்களாக திருத்தப்படவுள்ளது. இந்த கட்டணம் முன்னர் 5 டொலர்களாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுவான கடவுசீட்டுக்கான கட்டணம் 500 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. புதிய கட்டணம் 3500 ரூபாவாகும். ஒரே நாளில் கடவுச்சீட்டை பெறுவதற்கான கட்டணம் 5000 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைவாக புதிய கட்டணம் 15 ஆயிரம் ரூபாவாகும். கடவுசீட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கட்டணம் 500 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான புதிய கட்டணம் 1000 ரூபாவாகும்.
800 சிலிண்டர் வலுவுக்கும் குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 150,000 வினாலும் 1000 சிலின்டர் வலுவுக்கும் குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 175,000 ரூபாவினாலும் 1300 சிலின்டர் வலுவுக்கும் உட்பட்ட பெற்றோல் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 5 லட்சம் ரூபாவாக அதிகரிப்பு. 800 சிலிண்டர் வலுவுக்கும் குறைந்த ஐபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 250,000 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. சிலிண்டர் வலுவுக்கும் உட்பட்ட ஐபிரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரி 500,000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
கிலோ வோட் 70 மின்சார மோட்டார் வாகனத்தின் மீதான உற்பத்தி வரி 175,000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதேபோன்று 200 சிலின்டர் வலுவைக் கொண்ட முச்சக்கர வாகனம் மீதான உற்பத்திவரி 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகிறது.
நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.
யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு.
வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு.
தோட்டத்தொழிலாளர்களின் – மலையக மக்களின் நலன் தொடர்பில் சமகால அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்டோர் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த வரவு செலவுத்திட்டத்திலும் இந்த மக்களின் நலன் கருதி கவனம் செலுத்தியுள்ளோம்.
இதேபோன்று வடக்கு கிழக்கு மக்களின் சேம நலன்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைக்காக 24 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வடக்கில் 15 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் மேலும் 5500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றேன்.
அத்துடன், வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளானது தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதுடன், தேவையான வளங்களும் பெற்றுக் கொடுக்கப்படும்.
நாட்டில் டயர் தயாரிப்பு, இறப்பர் பால் மூலமான தயாரிப்பு தொடர்பில் பிரச்சினைகள் நிலவுகின்றன. இவற்றுக்குத் தீர்வாக இத்துறையை ஊக்குவிப்பதற்காக 850 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விவசாயத்துறையில் அறுவடைக்கு பின்னர் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக களஞ்சிய வசதியை தம்புள்ளை கட்டுநாயக்க போன்ற இடங்களில் அமைப்பதற்கு முன்மொழிகின்றேன். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகத் துறையினரை ஊக்குவிக்கும் நோக்கில் சிறிய ட்ரக் வாகனம் போன்ற உபகரணங்களுக்கு வரியை குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றேன். 52நாள் சதியில் சிக்கியிருந்த என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா போன்ற சமூக அபிவிருத்தி திட்டங்கள் ஊக்குவிக்கப்படவுள்ளன. இவ்வாறான சதியில் ஈடுபட்டிருந்தோரினால் இந்த அபிவிருத்தி திட்டங்கள் முழுமையாகத் தடைப்பட்டன. நாம் இப்பொழுது இவற்றை வலுப்படுத்தி வருகின்றோம்.
இந்த வருடத்தில் நாம் அறிமுகப்படுத்திய என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா, கம்பெரலிய போன்ற அபிவிருத்தி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வறியவர்களுக்கு பாதுகாப்பு என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூக பாதுகாப்பு வலைப்பின்னலை வலுவூட்டுதவற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார். திருமணம் முடிக்கும் இளம் சமூகத்தினருக்கு 25வருட காலத்துக்குள் செலுத்தக்கூடிய வகையில் தமக்கென வீடொன்றை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவை முன்வைக்கின்றேன். இதற்கு 6 சதவீத வட்டி அறவிறப்படும். இதேபோன்று வெளிநாட்டில் பணியாற்றி நாடு திரும்புவோருக்கு சிஹின மாலிகாவ கடன் அறிமுகப்படுத்தப்படும். இதனை 2 வருடத்துக்கு பின்னர் திருப்பி செலுத்துவதை ஆரம்பிக்க முடியும். 15வருட காலத்துக்குள் செலுத்தி முடிக்கக்கூடிய கடன் முறையாகும்.
சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் பெண்களுக்கு தொழில் மட்டத்தில் புனர்வாழ்வு அளிப்பதற்கு தொம்பேயில் ஆய்வு தொழில் பயிற்சி மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். தொற்றா நோயான 21ஆயிரம் சிறுநீரக நோயாளர்களுக்கு தலா 5000 ரூபா வழங்கப்படும். இதனை மேலும் 5000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊனமுற்ற நபர்களுக்காக வழங்கப்படும் 3000 ரூபா 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதியோர் பாராமரிப்பு அலுவலகம் வலுப்படுத்தப்படும். இதற்காக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்படும். பாதுகாப்பு புகலிடம் பரிந்துரைக்கு அமைவாக இதற்கு கடன் வசதிகள் வழங்கப்படும்.
பெண்கள் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுவதினால் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் பாடசாலை நேரத்துக்கு பின்னரும் விடுமுறை காலத்திலும் இவ்வாறான வசதிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இயற்கை கழிவறை வசதி மற்றும் கழிவுப் பொருட்கள் போன்றன தொடர்பாக சுகாதார மேம்பாட்டுக்காக 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. பஸ் தரிப்பு நிலையம், ரயில்வே நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நவீன வசதிகளை கொண்ட இயற்கை கழிவறை வசதிகள் விரிவுபடுத்தப்படும். பேசாலை, பருத்தித்துறை துறைமுக வசதிக்காக 1300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உலர்த்தப்படும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு மட்பாண்ட தொழிற்துறையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுற்றாடலை பாதுகாத்து வசதிகளை மதிப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயம் மற்றும் தோட்டத்துறைக்கான நீர் விநியோகத்திற்காக 2020ஆம் ஆண்டளவில் மொரக்கஹகந்த நீர் விநியோக திட்டம் பூர்த்தி செய்யப்படும்.
வடமேல் மஹஎல மினிப்பே கால்வாயின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும். இதற்காக 12 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும். தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெதுரு ஓயா நீர் வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 410 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை, சம்மாந்துறை, வாழைச்சேனை மற்றும் தலைமன்னார் நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.
பேரே வாவி திட்டம் பூர்த்தி செய்யப்படவுள்ளது. அறுவக்காடு கழிவுப்பொருள் கட்டமைப்பு நிறுவனத்தை முன்னெடுப்பதற்காக 7000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தல், பெத்தகான பூங்கா, கொழும்பு மாநகரம் வெள்ள பாதிப்பிலிருந்து தடுப்பதற்காக 900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
பிரதேச மட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக மாத்தளை அலுவிகார விளையாட்டு மைதானம், கொன்னாவ மல்லிமாரச்சி விளையாட்டு மைதானம் ஆகியன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. விவசாயம், கால்நடைத்துறை, அலங்கார மீன் உற்பத்தி, புல்டோசர் பயன்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க முன்வந்துள்ளது. NVQ சான்றிதழ் வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் தெரிவு செய்யப்படும் இராணுவ முகாம்களில் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் நன்மையடைய முடியும்.
சுவசரிய அம்புலன்ஸ் சேவை நாடு முழுவதிலும் விரிவுபட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கமைவாக நாடு முழுவதிலும் சுவசரிய அம்புலன்ஸ்களை நிறுத்துவதற்காக 300 இடங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் இந்த வருடத்தில் 100 இடங்கள் அமைக்கப்படவுள்ளன.
ருஹுணு பல்கலைக்கழகத்தில் – பீடம் ஒன்று அமைக்கப்படும். உயர் கல்விக்காகவும் வைத்திய கற்கைநெறிகளை மேம்படுத்துவதற்காகவும் சப்ரகமுவ மற்றும் குளியாபிட்டி வைத்திய பீடங்களுக்காக இரத்தினபுரி பெரியாஸ்பத்திரி, குளியா பிட்டிய பெரியாஸ்பத்திரி ஒன்றிணைக்கப்படும்.
கல்வி பொது தராதர உயர்தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கான சந்தர்ப்பத்தை இழக்கும் மாணவர்களுக்காக விஷேட வேலைத்திட்டம். இதனை நிதியமைச்சின் கீழ் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் சிறந்த உயர்தர பெறுபேரை பெற்றுக்கொள்ளும் 14 மாணவர்கள் மூலம் இது ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் உயர்கல்வி, பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கு சந்தர்ப்பம். அனைத்து மாணவர்களுக்கும் தரம் 13 கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் வலுப்படுத்தப்படும். இதற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்காக 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இளைஞர் சுற்றுலா பயணிகளுக்கும் சிறுவர் சுற்றுலா பயணிகளுக்கும் கலாசார நிலையங்களை பார்வையிடுவதற்காக அறவிடப்படும் கட்டணம் 50 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளது.
மாணிக்கக் கற்களை பட்டை தீட்டுதலுக்கான இயந்திரங்கள் முதலானவற்றை இறக்குமதி செய்வதில் துறைமுகம் மற்றும் விமான நிலைய வரிகள் குறைக்கப்படவுள்ளன. சுற்றுலா நிறுவனங்கள் இணையத்தள மூலமாக இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்தி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli