உங்கள் வீட்டில் சிக்கல்களிருக்க பிற சமூகத்துடன் பேசுவது எப்படி?
ஹக்கீம், ரிஷாட், அதாவுல்லா, ஹிஸ்புல்லா ஒன்றுபடவேண்டும் என்கிறார் வட்டரக்க விஜித தேரர்
முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்த சமூகத்தின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தமது வீடுகளுக்குள் சிக்கல்களை வைத்துக் கொண்டு, பிற சமூகங்களுடன் சமாதானம் பேச முடியாது. முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன் மற்றும் அதாஉல்லா ஆகியோருடன் ஹிஸ்புல்லா என அனைவரும் ஒன்றிணைதல் அவசியம். அப்போதுதான் சமூகம் எதிர்பார்க்கின்ற இலக்கினை நோக்கி நகரமுடியும் என ஜாதிக பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் தெரிவித்தார்.
ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஏ. ஜப்பார் தலைமையில் பொத்துவிலில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு வட்டரக்க விஜித தேரர் மேலும் கூறுகையில்,
சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம் மக்கள், அரசியல் மற்றும் மத ரீதியாக சிறு சிறு குழுக்களாக பிரிந்துள்ளனர். இதன் காரணமாகவே அவர்களின் தீர்க்க முடியாத பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டு செல்கின்றன.
முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்த சமூகத்தின் அரசியல் தலைவர்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தமது வீடுகளுக்குள் சிக்கல்களை வைத்துக் கொண்டு, பிற சமூகங்களுடன் சமாதானம் பேச முடியாது. ஒவ்வொரு சமூகங்களுக்குள்ளும் பிரச்சினைகள் உள்ளன. அதிலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுதல் அவசியம்.
முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுத்தீன் மற்றும் அதாஉல்லா ஆகியோருடன் ஹிஸ்புல்லா என அனைவரும் ஒன்றிணைதல் அவசியம். அப்போதுதான் சமூகம் எதிர்பார்க்கின்ற இலக்கினை நோக்கி நகரமுடியும். நமது வீடுகளுக்குள் பிரச்சினைகளை, சிக்கல்களை வைத்துக்கொண்டு பிற சமூகத்துடன் சமாதானம் பேச முடியாது. எனவே தங்களுக்குள் இருக்கின்ற சிக்கல்களை தீர்க்க முனையுமாறு குறித்த தலைவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோல் சிங்கள மக்களும் ஒன்றிணைவது அவசியம். முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களும் ஒன்றிணைவது மிக முக்கியமாகும். நாங்கள் இவ்வளவு காலமும் – இன நல்லிணக்கம் பற்றி பேசுகின்றோம். மூவினங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் பேசுகின்றோம். ஆனால் அதற்குரிய எந்த திட்டங்களும் இந்தநாட்டில் இன்னும் இல்லாதிருக்கின்றது. யுத்தம் முடிந்துள்ளது, ஆனால் மக்கள் மத்தியில் சமாதானமான வாழ்வு இல்லை.
இலங்கையில் நல்லிணக்கம், மத மற்றும் இன பல்லினத்தன்மை கட்டியெழுப்புப்படுதல் அவசியமாகும். அதற்குத் தேவையான நடவடிக்கையினை ஜாதிக பலசேனா மேற்கொள்ளும். இதேபோல் வடக்கு மக்களிடமும் சென்று அங்கும் இதே மாதிரியான ஆலோசனைகளை அங்குள்ள தமிழ் மக்களுக்கும் எடுத்துரைக்கவிருக்கின்றோம். தமிழ் மக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் கட்சிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் இன்னும் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. இனங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்காமல் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்றார்.