படுகொலை செய்யப்பட்ட சவூதி அரேபிய ஊடகவிலாளர் ஜமால் கஷோக்ஜியின் உடல் இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்திலுள்ள பெரியதொரு அவணில் வைத்து எரிக்கப்பட்டுள்ளமை அல் ஜெஸீராவின் புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு அல் ஜெஸீராவின் அரபு மொழி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட விவரணப் படமொன்றில் சவூதி அரேபிய கொலைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளரின் கொலை தொடர்பான விபரங்கள் காண்பிக்கப்பட்டன.
இஸ்தான்பூலில் அமைந்துள்ள சவூதி அரேபியத் துணைத் தூதரகத்தினுள் வைத்து கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் உடல் பாகங்கள் துணைத் தூதரகத்திலிருந்து சில நூறுமீற்றர்கள் தொலைவிலுள்ள சவூதி அரேபியத் துணைத் தூதுவரின் வாசஸ்தலத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பைகள் வீட்டுக்கு வெளியே பொருத்தப்படும் பெரிய ரக அவணில் எரிந்த நிலையில் காணப்படுவதை துருக்கிய அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
குறித்த அவணைப் பொருத்திய பணியாளரிடம் அல் ஜெஸீரா நேர்காணலை மேற்கொண்டபோது சவூதி அரேபியத் துணைத் தூதரகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல் மற்றும் வெப்ப அளவு குறிப்புக்களுக்கு அமைவாக அது அமைக்கப்பட்டதாகவும், அது ஆழமாகவும், தொடர்ச்சியாக ஆயிரம் பாகை செல்சியஸ் வெப்பநிலை பேணப்படும் வகையிலும் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். குறித்த வெப்பநிலை உலோகங்களை உருக்குவதற்குப் போதுமானது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02 ஆந் திகதி வொஷிங்டன் போஸ்ட் பத்தி எழுத்தாளரான கஷோக்கஜியை படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் குழுவினால் சுவர்களில் பூசப்பட்டிருந்த நிறப்பூச்சுக்களை அகற்றிய துருக்கிய விசாரணையார்கள் சுவர்களில் கஷோக்ஜியின் இரத்தத் துளிகள் படிந்திருப்பதை அவதானித்துள்ளனர்.
அல் ஜெஸீராவினால் ஒளிபரப்பப்பட்ட விவரணப் படம் பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் கஷோக்ஜியின் துருக்கிய நண்பர்கள் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது.
சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசரான மொஹமட் பின் சல்மானை கடுமையாக விமர்சித்துவந்த கஷோக்ஜி தனது துருக்கி நாட்டுக் காதலியான ஹாடிஸ் சென்ஜிஸை திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக சில ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02 ஆந் திகதி சென்றார்.
தீவிர சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டின் காரணமாக கஷோக்கி தமது துணைத் தூதரகத்தினுள் வைத்து கொல்லப்பட்டமையை சவூதி அரேபியா ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக கஷோக்ஜி துணைத் தூதரகத்தை விட்டு உயிருடன் வெளியேறியதாகத் தெரிவித்து வந்தது.
மொஹமட் பின் சல்மானே இக் கொலைக்கான உத்தரவைப் பிறப்பித்ததாக சீ.ஐ,ஏ தெரிவித்திருந்தபோதிலும் சவூதி அரேபியா அதனை மறுத்துள்ளது.
கஷோக்கியின் படுகொலை தொடர்பில் சவூதி அரேபியா பதினொரு பேர் மீது குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை விசாரணைகளை சவூதி அரேபியாவே மேற்கொள்ளும் எனவும் சந்தேக நபர்களை துருக்கிக்கு நாடுகடத்த முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளது.
சவூதி அரேபிய அரச அதிகாரிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொடூரமான படுகொலை என இக் கொலை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமைதாங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.
இக் கொலை தொடர்பான சர்வதேச விசாரணை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் ஜூன் மாதம் உத்தியோகபூர்வ அறிக்கை வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli