சிரியா, ஈராக் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் தோல்வியில் முடிந்துள்ளன
ஏற்றுக்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்
முடிவற்ற யுத்தங்களைத் தொடர்வதை விட அமெரிக்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்வதை தனது நிர்வாகம் விரும்புவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிரியா மற்றும் ஈராக் தொடர்பான தமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளை கடந்த சனிக்கிழமை விமர்சித்தார்.
பழமைவாத அரசியல் செயற்பாட்டு மாநாட்டில் இரண்டு மணி நேரம் உரையாற்றிய ட்ரம்ப் தனது உரையில் ஐ.எஸ். அமைப்பு இன்னும் ஓரிரு தினங்களில் நூறு வீதம் தோற்கடிக்கப்பட்டுவிடும் எனத் தெரிவித்ததோடு அமெரிக்கப் படைகள் மீள அழைத்துக்கொள்ளப்படும் என்பதையும் வலியுறுத்தினார்.
நாம் அங்கு சிறு குழுவாக அமெரிக்கர்களையும் படையினரையும் விட்டுவைப்போம். எனினும் எமது மக்களை மீண்டும் எமது நாட்டிற்கு மீள அழைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சரியான தருணம் இதுதான் எனவும் மேரிலேண்டில் நடைபெற்ற அவ்வமைப்பின் வருடாந்த நிகழ்வில் அவர் தெரிவித்தார்.
நாம் நான்கு மாதங்களுக்கே சிரியாவில் இருப்போம், ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் இருந்துவிட்டோம். மத்திய கிழக்கு தொடர்பில் ட்ரம்ப் தனக்கு முந்தைய அமெரிக்க அரசாங்கங்களின் கொள்கைகளை கடுமையாகச் சாடியதோடு, 2017 ஆம் ஆண்டு தான் முதன்முறையாக ஈராக்கிற்கு விஜயம் செய்தபோது பாதுகாப்புக் காரணங்களுக்காக தான் பயணித்த இராணுவ விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக விமானத்திலிருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டதனை நினைவுகூர்ந்தார்.
நினைத்துப் பாருங்கள், நாம் மத்திய கிழக்கில் 20 ரில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளோம். ஆனால் 20 வருடங்களின் பின்னர் எமது விமானத்திலுள்ள விளக்குகளை எரியவிட்டவாறு எம்மால் தரையிறங்க முடியவில்லை. இது எவ்வளவு கேவலம் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
-Vidivelli