எதியோப்பியாவும் கென்யாவும் சுதந்திர வர்த்தக வலயமொன்றை உருவாக்குவதற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கும் கடந்த வெள்ளிக்கிழமை இணக்கம் கண்டுள்ளன.
இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்குகொண்ட இருநாள் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இந்த இணக்கம் காணப்பட்டது.
தற்போதுள்ள வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதற்கான வழி வகைகளைக் கண்டறிவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
சபையில் ஆரம்ப உரையினை நிகழ்த்திய எதியோப்பிய பிரதமர் அபியி அஹமட் கடந்த வருடங்களில் தனது நாடு எல்லை கடந்த வர்த்தகம், உட்கட்டமைப்பு மற்றும் சக்திவள அபிவிருத்தி போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
எல்லைப் பிராந்தியமான மொய்லே பிராந்தியத்தினை கிழக்கு ஆபிரிக்காவில் பொதுவாக நிருவகிக்கப்படும் பொருளாதார கேந்திரமாக மாற்றுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் எனவும் அபியி அஹமட் குறிப்பிட்டார்.
கென்யா, தென் சூடான் மற்றும் எதியோப்பியாவை இணைக்கும் லாமு போக்குவரத்துப் பாதை நிர்மாணப் பணிகள் முடிவடைந்தால் இது பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய மொய்லே சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதற்கு தான் இணங்குவதாக கென்ய ஜனாதிபதி உஹ்ரு கென்யாட்டா தெரிவித்தார்.
பரஸ்பரம் நன்மையை ஏற்படுத்தத்தக்க வகையில் இருதரப்பு தொழிலதிபர்களும் ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
இருநாடுகளும் முதலீட்டு விடயங்களில் அதிக அக்கறை காட்டுமளவிற்கு வர்த்தக சூழல் மாற்றப்படுமென கென்ய அமைச்சரவைச் செயலாளர் பீற்றர் மக்காயா குறிப்பிட்டார்.
பொருட்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்காக விதித்த கடும் வரி மற்றும் கொள்கைகள் சம்பந்தமான தடைகளை நீக்க வேண்டுமென நாம் தலைவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தின் அளவு எட்டு பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli