சூடானின் ஆளும் தேசியக் காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் விலகிக் கொண்டுள்ளாரென கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அக்கட்சி தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மிகநீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசியக் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய மாநாட்டில் நிரந்தரமான தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை கட்சியின் பதில் தலைவராக சூடானின் தெற்கு கொர்டோபேன் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அஹமட் ஹாரூன் செயற்படுவாரென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காங்கிரஸ் கட்சித் தலைமைத்துவப் பொறுப்புக்களை அஹமட் ஹாரூனுக்கு கையளிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சியினை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு வரை தெற்கு கொர்டோபேன் மாநிலத்தின் ஆளுநராக ஹாரூன் கடமையாற்றினார். அதற்கு முன்னதாக, மனிதாபிமான விவகார அமைச்சராகவும், சூடானின் உள்துறை அமைச்சின் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.
சூடானின் டாபூர் பிராந்தியத்தில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தமை மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் 2017 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் ஹாரூன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli