தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்காது
உடன்பாடு எட்டப்படவில்லை என்கிறார் எரான்
நாட்டின் நலன் கருதி தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதனை தவறெனக் கூறமுடியாது. ஆனால் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாக இருந்தால் அதில் தனக்கு உடன்பாடில்லையென இராஜாங்க நிதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமென 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அதனையொரு தடையாகவே நான் கருதுகின்றேன். அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதை மாத்திரம் நோக்காகக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுதல் தவறானதொரு விடயமாகும்.
கடந்த காலங்களில் திட்டமிடப்பட்டவாறு பூர்த்தி செய்யப்படாத அபிவிருத்தி திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு மிகக் குறுகிய காலமே காணப்படுகின்றது. எனவே அவற்றை முழுமையாக செய்து முடிப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வேறு தொழில்களிலும் ஈடுபட முடியும். எனினும் அவர் அமைச்சராகவும் இருப்பின் வேறெந்த தொழில்களிலும் ஈடுபட முடியாது என்ற நிலையொன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பினால் கோரப்பட்டதற்கமைய தமது சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவித்திருந்தமை தொடர்பில் தெரிவித்த அவர், அரசியலில் ஈடுபடுவதன் மூலம் பொதுச் சொத்துக்களை கொள்ளையிடவும், ஊழலில் ஈடுபடவும் முடியும் என்பதே பலரின் அபிப்பிராயமாக உள்ளது. எனினும் அத்தகையதொரு அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கே நாங்கள் அனைவரும் தற்போது முன்வந்திருக்கின்றோம். நாங்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எமக்குள் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருக்கின்றன. எனினும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மனைவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.
அத்தோடு வருடாந்தம் சமர்ப்பிக்கப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களைப் பொறுத்தவரை, அவர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக இருப்பின் தமது விபரங்களை ஜனாதிபதியிடமும், பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருப்பின் தமது விபரங்களை பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இந்நிலையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli