காஸா பள்ளத்தாக்கில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக 49 ஆவது வாரமாக நடைபெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை காஸா – இஸ்ரேல் பாதுகாப்பு எல்லையில் பலஸ்தீனர்கள் ஒன்றுகூடினர்.
தடையினைத் தகர்ப்பதற்கான காஸா தேசிய அதிகாரசபையின் அறிக்கையொன்றில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுமாறு காஸா மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
ஊர்வலங்களில் பொதுமக்கள் பங்குபற்றுதலைப் பார்க்கும்போது தடைகள் தகர்க்கப்படும் வரை அவர்கள் தமது போராட்டங்களிலிருந்து பின்வாங்க மாட்டார்கள் என்பது புலனாகின்றது என 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காஸாவை ஆட்சி செய்து வரும் ஹமாஸின் பேச்சாளரான ஹாஸெம் காசிம் தெரிவித்தார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இஸ்ரேலியப் படையினரால் 250 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன மனித உரிமைகள் மத்திய நிலையத்தின் தகவல்களின் படி 2018 ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேலியப் படையினர் 54 சிறுவர்கள் உட்பட 310 பலஸ்தீனர்களைக் கொன்றுள்ளதோடு 900 இற்கும் மேற்பட்டேரைக் கைது செய்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசத்திலிருந்து காஸா பள்ளத்தாக்கைப் பிரிக்கும் எல்லை வேலிக்கு அருகில் மீளத் திரும்புவதற்கான மாபெரும் பேரணி கடந்த மார்ச் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அப் பகுதியில் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் என்ற நாட்டினை உருவாக்குவதற்காக 1948 ஆம் ஆண்டு தாம் விரட்டியடிக்கப்பட்ட தமது வாழ்விடங்களுக்கு திரும்புவதற்கான உரிமைக்காக பலஸ்தீன மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
காஸா கரையோரப் பகுதியினை பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதும், சுமார் இரண்டு மில்லியன் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமலாகியுள்ளதுமான 12 வருட கால இஸ்ரேலியத் தடையினை நீக்குமாறும் அவர்கள் கோருகின்றனர்.
-Vidivelli