- ஏ.ஆர்.ஏ.பரீல்
“அம்பாறையில் இரவில் காசிம் ஹோட்டலில் கைவைத்த இனவாதிகள் அம்பாறை பள்ளிவாசலை வெறிகொண்டு தாக்கியழித்தார்கள். புனித குர்ஆனை எரித்து சாம்பலாக்கினார்கள்.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டம் 4 ½ கோடி ரூபாவென மதிப்பீடு செய்து அறிவித்திருக்கிறேன். இந்த நஷ்டஈடு மதிப்பீட்டுப் பணியில் அரச தொழில் நுட்ப அதிகாரியும் கலந்துகொண்டார். பள்ளிவாசல் தாக்கி சிதைக்கப்பட்டு கடந்த 26 ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்தியாகியும் ஒரு நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை” என்கிறார் அம்பாறை ஜும்ஆ பள்ளி தாக்குதலுக்குட்பட்ட காலகட்டத்தில் அதன் நிர்வாக சபைத்தலைவராக இருந்த ஏ.எல்.ஏ. ஹாரூன்.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தவித அழுத்தங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரயோகிக்காது தற்போதைய நிர்வாகசபை மௌனித்து இருப்பது கவலை தருகிறது. இதற்கான முழுப்பொறுப்பையும் வக்புசபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
2018 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி இரவு 9.30 மணி, அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்தும் 1 ½ கிலோ மீற்றர்களுக்கு அப்பால் அமைந்துள்ள காசிம் ஹோட்டலிலிருந்தே வன்செயல் ஆரம்பிக்கப்பட்டது. காசிம் ஹோட்டலில் கருத்தடை வில்லைகள் கலக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன. பெரும்பான்மை இனத்தின் விருத்தியை கட்டுப்படுத்துவதற்கான சதி முயற்சி எனக்குற்றம் சுமத்தி இனவாதிகள் அன்றையதினம் 9.30 மணியளவில் ஹோட்டலைத்தாக்கினார்கள், தீயிட்டார்கள், பணியாளர்களையும், உரிமையாளரையும் துரத்தியடித்தார்கள்.
அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட வன்செயல்கள் ஏனைய முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும் பரவின. அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலையும் அவர்கள் வெறிகொண்டு தாக்கினார்கள். பள்ளிவாசல் தங்கும் அறைகளில் வெளியூர்களிலிருந்து வியாபார நோக்கமாக தங்கியிருந்தவர்களும், அவர்களது வாகனங்களும் தாக்கப்பட்டன எரிக்கப்பட்டன.
நிர்வாக சபைக்குள் பிளவு
பள்ளிவாசல் தாக்குதல்களுக்குள்ளாகி சுமார் ஐந்து மாதங்களின் பின்பு வக்புசபை பள்ளிவாசலுக்கென்று புதிய நிர்வாக சபையொன்றினைத் தெரிவு செய்தது. 2018, ஜுலை 6 ஆம் திகதி கூட்டமொன்று கூட்டப்பட்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அதாவது 24 நாட்களுக்குள் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 30 நாட்களுக்குப் பின்பே நியமனக் கடிதங்கள் வழங்கப்பட வேண்டும். வக்புசபை இவ்விடயத்தில் ஏன் அவசரப்பட்டது எனத் தெரியவில்லை என்றார் அக்காலத்தில் நிர்வாக சபையின் தலைவராக செயற்பட்ட ஏ.எல்.ஆர். ஹாரூன்.
இந்த 17 பேரைக் கொண்ட நிர்வாக சபைக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு நிர்வாக சபை இரண்டாகப் பிளவுபட்டதினையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பிருந்து வக்பு ட்ரிபுயுனல் ஐ.ஏ. ஜப்பார் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு சபையை நியமித்துள்ளது.
தற்போதைய நிர்வாக சபையின் தலைவர் ஐ.ஏ. ஜப்பாரைத் தொடர்புகொண்டு வினவியபோது வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட நிர்வாக சபையில் நிலவும் கருத்து முரண்பாடுகளையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கே நாம் நியமிக்கப்பட்டுள்ளோம். பள்ளிவாசல் நஷ்டஈடுகள் தொடர்பாக முன்னைய நிர்வாக சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு மாத காலத்தினுள் புதிய நிர்வாக சபையொன்று நியமிக்கப்படும் என்றார்.
பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு எவ்வளவு?
அன்றைய பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 4 ½ கோடி ரூபா என மதிப்பீடு செய்து அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் ரூபாய்களே என மாவட்ட செயலக அதிகாரிகளும், மதிப்பீட்டுத் திணைக்களமும் இணைந்து அறிக்கை தயாரித்துள்ளது. ஆனால் அரச நிறுவனங்களால் செய்யப்பட்ட மதிப்பீடுகளைக் கூட நஷ்டஈடாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காமை கவலைக்குரியதாகும். எமது நாட்டின் அமைச்சரவையில் மூன்று சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகிக்கிறார்கள். அவர்கள் தாம் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால் அரச நிறுவனங்களால் அரச அதிகாரிகளால் பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நஷ்டம் 27 மில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் நஷ்டஈடாக ஒரு மில்லியன் ரூபாவே வழங்கமுடியும் எனத் தெரிவிப்பது எந்த வகையில் நியாயமானது? முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பில் அமைச்சரவையில் வாதிட்டு உரிய நஷ்டஈட்டினை பெற்றுக்கொடுக்க ஆவன செய்திருக்கவேண்டும்.
அம்பாறையில் சுமார் 80 முஸ்லிம் குடும்பங்களே வாழ்கின்றன. சிங்களவர்களே அங்கு பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். முஸ்லிம்களுக்கென்று இருக்கும் அடையாளத்தை இல்லாமற் செய்வதே பெரும்பான்மை இனத்தின் இலக்காக இருக்கிறது. அதனாலேயே பள்ளிவாசலைத் தாக்கி சிதைத்திருக்கிறார்கள். அமைச்சரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையின அமைச்சர்கள் பள்ளிவாசல்களுக்கு உரிய நஷ்டஈட்டினை வழங்குவதற்குப் பின் நிற்பதற்கான காரணம் இதுவாக இருக்கலாம்.
மத ஸ்தலங்களுக்கு நஷ்டஈடாக ஆகக்கூடியது ஒரு மில்லியனே வழங்கமுடியும் என ஒரு சுற்று நிருபம் உள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபை தெரிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சட்ட நடவடிக்கை இல்லை
அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பாக 450 பேருக்கும் மேற்பட்டோரிடமிருந்து பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுள்ளார்கள். ஆனால் எவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காசிம் ஹோட்டல் உணவுகளில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டினையடுத்து அந்த ஹோட்டலின் உணவு மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் அவ்வாறான கலப்படங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பான்மை இனத்தின் திட்டமிட்ட தாக்குதல்களே அம்பாறை வன்முறைகளாகும்.
புனர்வாழ்வு அதிகாரசபை
அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களினால் 13 சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்சொத்துகளுக்கான நஷ்டஈடாக 36 இலட்சம் ரூபா வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் புனர்வாழ்வு அதிகாரசபையின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம்.பதுர்தீன் தெரிவிக்கிறார்.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நஷ்டஈடு 27 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் நஷ்டஈடாக ஒரு மில்லியன் ரூபா வழங்குவதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மதஸ்தலங்களுக்கு நஷ்டஈடாக ஒரு மில்லியன் ரூபாவுக்கு மேல் வழங்கமுடியாதென புனர்வாழ்வு அதிகாரசபை தெரிவிக்கிறது. அவ்வாறானதொரு சுற்று நிருபம் இருக்குமானால் அதில் காலத்துக்குக்கேற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். புனர்வாழ்வு அதிகார சபைக்குப் பொறுப்பான அமைச்சராக தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிக்கிறார். எனவே முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமருடன் கலந்துரையாடி புனர்வாழ்வு அதிகாரசபையின் சுற்று நிருபத்தில் மாற்றங்களை செய்து பள்ளிவாசலுக்கு உரிய நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்படவேண்டும். இல்லையேல் அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் இதற்கான பதிலை வழங்கவேண்டியேற்படும்.
காசிம் ஹோட்டலுக்கான நஷ்டஈடு
அம்பாறை காசிம் ஹோட்டலுக்கான நஷ்டஈடு 22 இலட்சம் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தொகையில் 10 வீதமே வழங்க முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் அதன் உரிமையாளர் ஏ.எல்.பரீத் தெரிவிக்கிறார்.
காசிம் ஹோட்டல் கட்டடத்தின் உரிமையாளர் ஒரு பெரும்பான்மை இனத்தவராவார். ஹோட்டலுக்கு முற்பணமாக 7 இலட்சம் ரூபா கட்டட உரிமையாளருக்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் அந்தப் பணத்தை திருப்பி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் உட்பட பணியாளர்களுக்கு தொடராக காசிம் ஹோட்டலே இலவசமாக உணவு வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம்களுக்கு மறுப்பு
காசிம் ஹோட்டல் தாக்குதல்களுக்கு உள்ளானதன் பின்பு அந்த ஹோட்டலை முஸ்லிம்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு ஹோட்டல் கட்டடத்தின் உரிமையாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார். காசிம் ஹோட்டல் தற்போது அதன் உரிமையாளராக பெரும்பான்மை இனத்தவரினாலே நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.எல்.பரீத் கவலை வெளியிட்டுள்ளார். உரிய நஷ்டஈடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஹீம் ஹோட்டலுக்கான நஷ்டஈடு
அம்பாறை வன்செயல்களின்போது ரஹீம் ஹோட்டலும் தாக்கப்பட்டதாகவும் நஷ்ட ஈட்டினை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அதன் உரிமையாளர் ஐ.எம்.ஏ.ர-ஹீம் தெரிவிக்கிறார். அவரது 28 இலட்சம் ரூபா பெறுமதியான வேனும் எரிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். நஷ்டஈடுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், ரவூப்ஹக்கீம் என்போருக்கு கடிதங்கள் அனுப்பியும் எதுவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சில வாரங்களுக்கு முன்பு தாக்குதல்களுக்குள்ளான பள்ளிவாசலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளார். இவ்வாறான நகர்வுகள் அனைத்துத் தரப்பினராலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அம்பாறையில் முஸ்லிம்களின் எதிர்காலம்
அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைகள் திட்டமிடப்பட்ட செயலாகவே தெரிகிறது.
கொத்து ரொட்டியில் கருத்தடை மத்திரை கலக்கப்படுவதாக முன்னேடுக்கப்பட்ட பிரசாரம் பொய்யானது என்பதை விஞ்ஞான ரீதியான பரீசோதனைகள் ஊடாக சுகாதார அமைச்சே உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இவ்வாறான பொய்க்கதைகளைக் கூறி அங்கு சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை ஓரங்கட்டுவதே பெரும்பான்மை இனத்தின் இலக்காக இருக்கிறது.
முஸ்லிம்களின் அடையாளச் சின்னமான பள்ளிவாசல் வெறிகொண்டு தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அங்கு இன உறவுகள் வலுவடைந்துள்ளதாகத் தெரியவில்லை. எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அங்கு வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கும், பள்ளிவாசலுக்கும் உரிய நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவேண்டும்.
பள்ளிவாசல் பரிபாலனத்தை சீராக முன்னெடுப்பதற்கும், உரிய நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கும் எற்ற வகையில் வக்புசபை செயற்திறன்மிக்க நிர்வாக சபையொன்றினை விரைவில் நியமிக்கவேண்டும்.
-Vidivelli