வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம்: அலரி மாளிகையிலிருந்து வெளியேறிய 4 வாகனங்கள் குறித்து விசாரணை

0 789

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட தினம், அலரி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­றிச்­சென்ற நான்கு வாக­னங்கள் தொடர்பில் சி.ஐ.டி. தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. அத்­துடன் தாஜுதீன் கொலை சந்­தேக நபர்­களை அடை­யாளம் காண்­ப­தற்­காக கொலை இடம்­பெற்ற தினம், குறிப்­பிட்ட நேரத்தில் நாசாவின் செயற்கைக் கோளினால் பிடிக்­கப்­பட்ட படங்கள், வீடி­யோக்­களை தமக்குப் பெற்­றுத்­த­ரு­மாறு  சி.ஐ.டி. கோரிய நிலையில், குறிப்­பிட்ட நேரத்தில் குறித்த இடத்தில் எந்­த­வொரு செய்­ம­தியும் செயற்­ப­ட­வில்லை என்­பதால் அவ்­வா­றான எந்தப் படங்­களும் இல்லை என நாஸா அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் இந்தப் படு­கொலை குறித்த விசா­ர­ணை­களில் தற்­போது நம்­பிக்­கை­யூட்டும் தக­வ­லொன்று கிடைத்­துள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­க­ளான சி.ஐ.டி.யுடன் மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க மன்­றுக்கு அறி­வித்தார்.

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவின் சிரி­லிய சவிய எனும் திட்­டத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­ட­தாக சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள மிக நம்­ப­க­ர­மான தக­வலை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டி­ருந்­தன.

டப்­ளியூ.பி. கே.ஏ. 0642 எனும் குறித்த டிபெண்டர் வண்­டியில், உயி­ரியல் கூறுகள் உள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்­பப்­பட்­டது. அதனை  சோதனை செய்­துள்ள அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள், கொலை இடம்­பெற்று பல வரு­டங்கள் கடந்த போதும், குறித்த டிபெண்­டரில் ஆய்­வு­களை முன்­னெ­டுக்க முடி­யு­மான நிலை­மையில் உயி­ரியல் கூறுகள் இருப்­பதைக் கண்­ட­றிந்­துள்­ளனர்.

அந்த உயி­ரியல் கூறுகள் வசீம் தாஜு­தீ­னு­டை­யதா என்­பது  உள்­ளிட்ட மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவை வஸீம் தாஜு­தீ­னி­னு­டை­யது என உறுதி செய்­யப்­ப­டு­மாக இருந்தால் இவ்­வ­ழக்கில் அது மிகப் பெரும் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­து­மெ­னவும் அதனால் அந்தப் பரி­சோ­த­னைகள் மீது நம்­பிக்கை வைத்து காத்­தி­ருப்­ப­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­நா­யக்க,  கொழும்பு மேல­திக நீதிவான் இசுரு நெத்­தி­கு­மா­ர­வுக்கு அறி­வித்தார்.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று பிற்­பகல் கொழும்பு மேல­திக நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் சாட்­சி­களை மறைத்­தமை, மாற்­றி­யமை மற்றும் கொலைச்­ச­தியில் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்டு பிணை­யி­லுள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி அங்­கொ­டகே சுமித் சம்­பிக்க, மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேன­நா­யக்க மற்றும் கொழும்பு முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். முத­லிரு சந்­தேக நபர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் எவரும் ஆஜ­ரா­காத நிலையில், மூன்றாம் சந்­தேக நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்­னாண்டோ  ஆஜ­ரானார்.

சட்­டமா அதிபர் சார்பில் வழ­மை­யாக மன்றில் ஆஜ­ராகும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க நேற்று மன்றில் ஆஜ­ரானார்.   சி.ஐ.டி. சார்பில் விசா­ரணை அதி­கா­ரி­க­ளான மனிதப் படு­கொலை குறித்த விசா­ரணை அறையின் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க மற்றும் சார்ஜன்ட் ரத்­னப்­பி­ரிய ஆகியோர் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இந்­நி­லையில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் குறித்த சி.ஐ.டி.யின் மேல­திக  விசா­ரணை அறிக்­கையை மையப்­ப­டுத்தி, பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­நா­யக்க மன்றில் விட­யங்­களை முன்­வைத்தார்.

“கொலை செய்­யப்பட்ட வஸீம் தாஜு­தீ­னுக்கு சொந்­த­மான   மடிக்­க­ணினி ஒன்­றினை நாம் சோதனை செய்­த­போதும் அதில் சந்­தே­கத்­துக்­கி­ட­மான எந்த தட­யமும் கிடைக்­க­வில்லை. அதே போல் வஸீம் தாஜுதீன் படு­கொ­லையில் குற்­ற­வா­ளி­களைக் கைது செய்ய சி.ஐ.டி. அமெ­ரிக்­காவின் தேசிய வானூர்­தி­யியல் மற்றும் விண்­வெளி நிர்­வாகம் எனப்­படும்  நாசாவின் உத­வியை நாடி­யி­ருந்தோம். தாஜுதீன் கொலை சந்­தேக நபர்­களை அடை­யாளம் காண்­ப­தற்­காக கொலை இடம்­பெற்ற தினம், குறிப்­பிட்ட நேரத்தில் நாசாவின் செயற்கைக் கோளினால் பிடிக்­கப்­பட்ட படங்கள், வீடி­யோக்­களை தமக்கு பெற்­றுத்­த­ரு­மாறு  கோரி­யி­ருந்த நிலையில் அந்த அறிக்கை கிடைத்­தது. அதிலும் எந்த தக­வலும் இல்லை.

வஸீம் தாஜு­தீனின் கைய­டக்கத் தொலை­பே­சியை டிஜிட்டல் பகுப்­பாய்­வுக்­குள்­ளாக்கி பெற்­றுக்­கொண்ட அறிக்­கையை மையப்­ப­டுத்தி முன்­னெ­டுக்­க­பப்டும் விரி­வான விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

அதே போல் வஸீமின் சகோ­த­ரியால் சி.ஐ.டி.க்கு வழங்­கப்­பட்ட சி.ஐ.ரி.வி. காணொ­லியை மையப்­ப­டுத்­திய  மேல­திக விசா­ர­ணை­களும் இடம்­பெ­று­கின்­றன.

அதேபோல் இவ்­வ­ழக்கில் முக்­கிய சான்றுப்  பொரு­ளாக கரு­தப்­படும் டப்­ளியூ.பி. கே.ஏ. 0642 எனும் குறித்த டிபெண்டர் வண்­டியில், உயி­ரியல் கூறுகள் உள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்­பப்­பட்டு சோதிக்­கப்பட்­டது. அப்­போது அதில் இன்னும் பரி­சோ­த­னைக்கேற்ற நிலையில் உயி­ரியல் கூறுகள் இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லைமை நம்­பிக்­கை­ய­ளிக்­கின்­றது. அந்த உயி­ரியல் கூறுகள் வஸீ­மி­னு­டை­ய­தாக இருப்பின் இவ்­வ­ழக்கில் மிகப்­பெரும் மாற்றம் ஏற்­ப­டலாம்.

இதே­வேளை, வஸீம் கொலை செய்­யப்­பட்ட தினத்தில் ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­றிய  நான்கு வாக­னங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­கின்றோம்” என்றார். இதன்­போது  அறிக்­கையில் அலரி மாளிகை என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதை அவ­தா­னித்த நீதிவான், ஜனா­தி­பதி மாளி­கை­யெனக் குறிப்­பிட்­டது அலரி மாளி­கை­யையா என கேள்வி எழுப்­பினார்.

அதற்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ஆம் என்று கூறி­ய­துடன், அப்­போ­தைய ஜனா­தி­பதி அதி­லேயே தங்­கி­யி­ருந்­த­தாகக் கூறினார். அங்­கி­ருந்து நான்கு வாக­னங்கள் கொலை இடம்­பெற்ற தினத்தில் வெளி­யே­றி­யுள்­ள­தா­கவும், அதில் சென்ற கடற்­படை, இரா­ணுவ வீரர்கள் குறித்து விசா­ரணை இடம்­பெ­று­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது நீதிவான் இசுரு நெத்­தி­கு­மார,   அந்த இரா­ணுவ வீரர்கள் எதற்­காக அலரி மாளி­கையில் இருந்­தனர் என கேட்டார். அதற்கு பிரபு பாது­க­ாப்பு அதி­கா­ரி­க­ளாக அவர்கள் செயற்­பட்­டார்கள் என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் பதி­ல­ளித்­த­துடன், அந்தப் பிரபு யார் என மீண்டும் நீதிவான் கேள்வி எழுப்­பினார். அதற்கு பதி­ல­ளித்த  பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் அவர் மஹிந்த ராஜபக் ஷ எனப் பதி­ல­ளித்தார்.

இத­னை­விட வஸீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்ட தினத்தில், அதா­வது, 2012.05.16 ஆம் திக­திக்கும் மறுநாள் 17 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட கால நேரத்தில்,  சம்­பவம் இடம்­பெற்ற பகு­தி­யி­லுள்ள  தொலை­பேசி தொடர்­பாடல் கோபு­ரத்­தி­லி­ருந்து அனைத்து தக­வல்­களும் பெறப்­பட்டு அதி­லி­ருந்து  சந்­தேக நபரை அடை­யாளம் காணும் பணிகள்  தற்­போது இடம்­பெ­று­வ­தாக  நீதி­வா­னுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில்  தற்­போ­துள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 198, 215 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுக்கள் தெளி­வாக உள்­ளன.  அது தொடர்பில் மேல­திக விசா­ரணை தேவைப்­ப­டு­மானால் குற்­ற­வியல் சட்­டத்தின் 115 ஆம் பிரிவின் கீழ் அனு­மதி வழங்­கலாம்.

எனினும்,  இவர்­க­ளுக்கு எதி­ராக சாட்­சிகள் இல்லை. குற்­ற­வியல் சட்­டத்தின் 113 அ பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் 296 ஆம் பிரிவின் கீழ்­வரும் அந்தக் குற்­றச்­சாட்டு இம்­மூன்று சந்­தேக நபர்கள் தொடர்­பிலும் தொடர்ந்து முன்­வைக்­கப்­ப­டுமா இல்­லையா என்­பது குறித்து தெளிவு தேவை. கொலை தொடர்பில் இன்னும் சந்­தேக நபர்கள் எவரும் கைது செய்­யப்­ப­டாத நிலையில் இவர்­க­ளுக்கு எதி­ராக அக்­குற்­றச்­சாட்டை தொடர்­வதா? என நீதிவான்  கடந்த தவ­ணையில் எழுப்­பிய கேள்­வியை ஞாப­கப்­ப­டுத்தி பதில் கோரினார்.

இந்­நி­லையில் சந்­தேக நபர்கள் மூவரையும் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து, சாட்சிகளை அழித்தமை தொடர்பில் தனியாக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு  சுட்டிக்காட்டிய  நீதிவான், கொலைக் குற்றவாளிகளை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கூறி வழக்கை எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதிக்கு  வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த 2012 மே 17 ஆம் திகதி வஸீம் தாஜுதீனின் சடலம் அவரது காருக்குளிருந்து மீட்கப்பட்டது. அப்போது கார் இருந்த இடத்துக்கு பக்கத்தில்  இருந்த வீடுகளில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி.காட்சிகள் அடங்கிய டி.வி.டி.கள் இரண்டு கடந்த 2017 ஜூலை 8 ஆம் திகதி, வஸீம் தாஜுதீனின் மூத்த சகோதரியான  பாத்திமா ஆய்ஷா தாஜுதீனினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.