அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை (இன்று) விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் வான் பரப்புக்குள் நுழைந்த இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியது. இதில் இந்திய விமானியான அபிநந்தன் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த இரு தினங்களாக பாகிஸ்தான் மிகவும் கண்ணியமாக நடாத்திவந்த நிலையில் அவரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யத் தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.
இதன்போது இம்ரான் கான் மேலும் உரையாற்றுகையில்,
காஷ்மீரில் நடக்கும் எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானை எவ்வளவு காலம் பழிசுமத்த முடியும் என்று கேட்க விரும்புகிறேன்.
பாகிஸ்தான் ஊடகங்கள் போர் குறித்தான எதையும் கூறவில்லை. ஆனால், இந்தியாவில் போர் குறித்து இந்திய ஊடகங்களால் தூண்டப்படுவது வருத்தமடையச் செய்துள்ளது. நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை முன்வைத்துள்ளோம். ஆனால் அவர்களது தரப்பிலிருந்து வரும் செய்திகள் நல்ல விதத்தில் இல்லை.
பாகிஸ்தான் எச்சரிக்கையோடும், சுய கட்டுப்பாட்டுடனும் நடந்துகொண்டது. இந்திய அத்துமீறலுக்குப் பதிலடி தந்ததுகூட, எங்கள் இறையாண்மையை காத்துக்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என்பதைக்காட்டத்தான்.
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பாகவே தற்கொலை குண்டுவெடிப்பில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்துமத நம்பிக்கையை சேர்ந்தவர்கள். தற்கொலை குண்டு தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம். அதற்கு மதச்சாயம் பூசமுடியாது. ஆனால், இந்த தந்திரம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான உண்மையான காரணிகளைத் தேடவேண்டும்
இந்திய மக்கள் தற்போதுள்ள அரசின் போர் பற்றிய தூண்டுதலை ஆதரிக்கவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் எல்லாவற்றுக்கும் காரணம் காஷ்மீர். நான் இந்திய மக்களிடம் கடந்த நான்கு வருடங்களாக காஷ்மீரில் நடப்பது குறித்த கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.
காஷ்மீரில் உள்நாட்டுப் போராட்டம் நடந்து வருகிறது. காஷ்மீர் தலைவர்கள் ஒருகட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரிவினையை கேட்கவில்லை. ஆனால், இந்தியா இழைத்த கொடுமைகள் காரணமாக அவர்கள் இப்போது சுதந்திரம் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பார்கள். ஏன் 19 வயது இளைஞர் மனித வெடிகுண்டாக மாற வேண்டும்? காஷ்மீரில் நடப்பவை அனைத்துக்கும் பாகிஸ்தானை எவ்வளவு காலம் பழிசுமத்த முடியும். அதுமட்டுமில்லாது ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியும்?
நாங்கள் மோதலை விரும்பவில்லை என்று தெரிவிக்க இந்திய பிரதமர் மோடிக்கு நேற்று மாலையிலிருந்து தொலைபேசியில் முயற்சித்தேன் எனத் தெரிவித்தார்.
இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli