வடக்கு பின்லாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை புகைக் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டதாக பின்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒலு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலின் ஜன்னலை உடைத்துவிட்டு அதனூடாக புகைக் குண்டு வீசியுள்ளதாக ஒலு நகரப் பொலிஸ் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக உடமைகளுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளது, உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் கறுப்பு நிற மேலங்கியும் வெள்ளை நிறத்திலான தொப்பியொன்றையும் அணித்திருந்தமை காணொலியொன்றில் பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பள்ளிவாசல் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒன்பதாவது தாக்குதலாகும் என பள்ளிவாசல் இமாம் அப்துல் மன்னான் தெரிவித்தார்.
ஒலு பகுதியில் 3,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும் சுமார் ஆயிரம் பேர் இப்பள்ளிவாசலைப் பயன்படுத்தி வருவதாகவும் உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
-விடிவெள்ளி