நாடெங்கிலுமுள்ள அரசாங்க பாடசாலைகளில் 179 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களே நிலவுகின்றன. எழுத்துப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டு விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். நீண்டகாலமாக வழங்கப்படாதுள்ள மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்நியமனங்களை வழங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 28 ஆம் திகதியுடன் (இன்று) விண்ணப்பிக்கும் திகதி முடிவடைகிறது. புதிய விண்ணப்பதாரிகளுக்கு எழுத்துப் பரீட்சை நடாத்தப்பட்டு ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவர்களிலிருந்து வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற மௌலவி ஆசிரியர் நியமனத்துக்கான பரீட்சை எழுதியவர்களிலிருந்து நியமனங்கள் வழங்கப்படமாட்டாது.
தற்போது சர்வமத ஆசிரியர் வெற்றிடங்கள் 2457 உள்ளன.
பௌத்த மதத்திற்கான வெற்றிடம் 957, இந்து மதம் 956, கத்தோலிக்க மதம் 213, இஸ்லாம் 179, கிறிஸ்தவம் 152 வெற்றிடங்கள் நிலவுகின்றன.
இந்துமத ஆசிரியர் நியமனம் நீண்டகாலமாக வழங்கப்படாததனாலே 956 வெற்றிடங்கள் உள்ளன. இஸ்லாம் போதிப்பதற்கான மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் குறைவாக இருப்பதற்குப் பலகாரணங்கள் உள்ளன.
இஸ்லாமிய நாகரிகம் கற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றும் அரபு மொழி ஆசிரியர்களும் கடந்த காலங்களில் நியமனம் பெற்றுள்ளார்கள்.
35 வயதுக்குட்பட்ட வர்களுக்கே இம்முறை மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்.
கிழக்கு மாகாணத்தில் தேவைக்கும் அதிகமாக மௌலவி ஆசிரியர்கள் கடமையில் இருக்கிறார்கள் என்றார்.
-விடிவெள்ளி