நேபாளத்தில் தப்ளேஜங் மாவட்டத்தில் நேற்று மலையுடன் மோதி உலங்கு வானூர்தியொன்று விபத்துக்குள்ளானதில் நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி உலங்கு வானூர்தியில் புறப்பட்ட போது, பதிபாரா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து, நொறுங்கி விபத்துக்குள்ளானது. அந்த பகுதியில் உலங்கு வானூர்தி பறந்ததைப் பார்த்த பொதுமக்கள், சில நிமிடங்களில் அந்த இடத்திலிருந்து மிகப்பெரிய அளவு தீப்பிழம்பு வெளியானதைக் கண்டு அரச அதிகாரிகளுக்கும், தப்ளேஜங் மாவட்ட அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து, சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த போது, அங்கு உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதை உறுதி செய்தனர். இந்த விபத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரபிந்திர அதிகாரி, பிரதமர் உதவியாளர் கே.பி. சர்மா, பிரேந்திர பிரசாத் ஷிரேஸ்தா, யுவ்ராஜ் தாஹல், அங் செரிங் செர்பா ஆகிய அதிகாரிகள் பயணம் செய்தனர். உலங்கு வானூர்தியில் பயணித்த அனைவரும் பலியானார்கள் என விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தப்ளேஜங் மாவட்ட ஆட்சியல் அனுஜ் பண்டாரி கூறுகையில், ” பதிபாரா பகுதியில் உலங்கு வானூர்தி சென்றபோது, திடீரென மிகப்பெரிய சத்தத்துடன் கூடிய தீப்பிழம்பு புகை ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகி இருந்தது. அதிகாரிகள், தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர் ” எனத் தெரிவித்தார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து நேபாள பிரதமர், உடனடியாக அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு தனது இல்லத்தில் ஏற்பாடு செய்துள்ளார்.
-விடிவெள்ளி