போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் இந்தியா – பாக். முறுகல் தீவிரமடைகிறது
இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தானில் சிறைபிடிப்பு; போர் வேண்டாம், பேச்சுவார்த்தையே தீர்வு என்கிறார் இம்ரான்
- எம்.ஐ.அப்துல் நஸார்
இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதுடன் இரு விமானிகளையும் சிறைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் தமது போர் விமானம் ஒன்றும் விமானி ஒருவரும் காணாமல் போயுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந் நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளன.
பாகிஸ்தான் எல்லையினுள் நுழைந்த இரண்டு இந்திய ஜெட் விமானங்களை தமது நாட்டின் விமானப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் நேற்று அறிவித்தது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை மீறிய இந்திய விமானப் படையின் இரண்டு தாக்குதல் ஜெட் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையினுள் வைத்து தமது நாட்டு விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் ஆசிப் கபூர் தெரிவித்தார்.
இந்திய விமானியொருவர் தரையிலிருந்த படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மற்றும் இருவர் குறித்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சு விடுத்திருந்த அறிக்கையொன்றில் பாகிஸ்தான் வான்பரப்பிற்குள்ளிருந்து கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
அது இந்தியத் தாக்குதல்களுக்கான எதிர்த் தாக்குதல் அல்ல. மனித உயிர்ச் சேதங்கள் மற்றும் இராணுவச் சேதங்கள் ஏற்படாத வகையில் இராணுவத்தோடு சம்பந்தப்படாத இலக்குகள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாம் நாக்குதல்களை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படுமானால் அதற்கு தயார் நிலையில் நாம் எமது இராணுவத்தினை வைத்திருக்கின்றோம் பாகிஸ்தான் இந்தத் தாக்குதல்களை நடத்துவது பகல் பொழுதிலாகும். இது எச்சரிக்கைத் தாக்குதல்கள் மாத்திரமேயாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா கடந்த சில வருடங்களாக போலியான காரணங்களைக் கூறி பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது. எந்த வித ஆதாரங்களுமின்றி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதாகக் குற்றம் சாட்டுகின்றது. பாகிஸ்தான் அதற்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் உரிமையினைக் கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாம் அதே வழியில் பயணிக்க விரும்பவில்லை. முதிர்ந்த ஜனநாயக தேசம் என்ற வகையில் சமாதானத்திற்கான சந்தர்ப்பமொன்றை இந்தியா வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானி கைதானதை உறுதிப்படுத்தியது இந்தியா
இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் இராணுவ பிடியில் சிக்கியதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக நேற்றுக் காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது.
எல்லையில் நடந்த இந்தியா – – பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து விவரித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் இராணுவ பிடியில் சிக்கியதை உறுதி செய்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “இன்று அதிகாலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய தரப்பில் மிக் 27 ரக விமானங்கள் பதில் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்திய விமானத்தை வீழ்த்தியதாகக் கூறும் பாகிஸ்தான் அதிலிருந்த விமானி அபினந்தனை கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது. அபினந்தன் இன்னும் திரும்பவில்லை. உண்மையை கண்டறியும் முயற்சியில் உள்ளோம்” என்றார்.
நேற்றுக் காலை முதலே சமூக வலைத்தளங்களில் வேகமாக ஒரு வீடியோ பரவிவருகிது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபினந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சேவை இல 27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார். மேலும், சில தகவல்களைக்கோர இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல அனுமதியில்லை என்கிறார். நான் பாகிஸ்தான் இராணுவத்திடமா இருக்கிறேன் என்றும் விசாரிக்கிறார்.
இந்த வீடியோ பரவி வரும் நிலையில்தான் பாகிஸ்தான் இராணுவத்திடம் அபினந்தன் சிக்கியதை இந்திய தரப்பும் உறுதி செய்துள்ளது.
கைதாகியுள்ள இந்திய விமானப்படை விமானி அபினந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவர் தாம்பரம் விமானப்படையில் பயிற்சி பெற்றவர் எனத் தெரிகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் விமானப் படையில் இணைந்துள்ளார்.
இம்ரான் கான் உரை
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களாலும் திருப்பி தாக்க முடியும் என்பதை நிருபிக்கவே நேற்று பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினோம். எங்கள் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காக நாங்கள் பதில் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஏனெனில் எங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக நாங்கள் எண்ணவில்லை. எங்கள் பகுதியில் அதிகமான பாதிப்புகள் இல்லாதபோது, இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எங்களால் திருப்பி தாக்க முடியும் என்பதை நிரூபிக்க மட்டுமே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின.
தவறான கணிப்பால் தான் போர்கள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளிடமும் தற்போது ஆயுதங்கள் உள்ளன. நாங்களும் தவறாக கணித்தால், நாம் போரில் ஈடுபடும் சூழல் ஏற்படும். பிறகு நானோ, நரேந்திர மோடியோ எதையும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான் சரியான புரிதல் வேண்டும். தீவிரவாத பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாங்கள் தயாராக உள்ளோம்’’ என நான் கூறுகிறேன்.
பாகிஸ்தான் துணைத் தூதரை அழைத்து இந்தியா பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் துணைத் தூதரை அழைத்து இந்தியா நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. நேற்றைய தினம் டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அணு ஆயுத நிபுணர்களுடன் இம்ரான் கான் பேச்சு
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தகர்த்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தயாரிப்பு, உருவாக்கம், ஆராய்ச்சி, மேம்பாடு தொடர்பான விடயங்களை கவனித்து வரும் நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் மிக முக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிகிறது. கூட்டம் பற்றி விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-விடிவெள்ளி