ஹஜ் சட்டவாக்க பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும்

0 741

எமது  நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளும், ஹஜ் தொடர்பான விடயங்களும் ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு என்பன முன்னெடுத்துள்ளன. ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டமொன்றினை இயற்றி பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஹஜ்ஜுக்கான சட்ட வரைபொன்று அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டு தற்போது அந்த வரைபு அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீம் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளின் போது கடந்த காலங்களில் பாரிய சவால்கள் ஏற்பட்டமை அனைவரும் அறிந்தவிடயமே. இலங்கைக்கு குறிப்பிட்டளவு ஹஜ் கோட்டா கிடைப்பதால் அக்கோட்டாவின் எண்ணிக்கையை அதிகளவில் பகிர்ந்து கொள்வதற்கு ஹஜ் முகவர்கள் அமைச்சருடனும் அரச ஹஜ் குழுவினருடனும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடனும் முரண்பட்டுக்கொண்டனர். இதற்காக நீதிமன்றப் படிகளிலும் ஏறினார்கள்.

இவ்வாறான நிலைமையினைத் தவிர்ப்பதற்கும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக் கருதியுமே ஹஜ் சட்டமூலமொன்றின் தேவை உணரப்பட்டு தற்போது அது சட்ட வரைபாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச ஹஜ் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைபில் அடங்கியுள்ள விடயங்களை மீளாய்வு செய்து தேவையான விடயங்களை உள்வாங்கிக் கொள்வதற்காக கடந்த சனிக்கிழமை கொழும்பில் மாநாடொன்று நடத்தப்பட்டது. ஹஜ் சட்டவரைபினை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இம்மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, தேசிய சூரா சபை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ, இஸ்லாமிய இயக்கங்கள், தரீக்காக்கள், ஹஜ் முகவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் என சுமார் 90 பேர் கலந்துகொண்டனர். 40 சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் உள்ளடங்கியிருந்தனர்.

ஹஜ் சட்ட வரைபில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டன. அரச ஹஜ் குழு உறுப்பினர்களின் நியமனம் அமைச்சரினால் வழங்கப்படும் என்று வரைபில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. ஹஜ் குழு சுயாதீனமாகவே இயங்கவேண்டும். அமைச்சரினால் அந்நியமனம் வழங்கப்படக்கூடாது என எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

ஹஜ் கணக்கில் வைப்பிலிடப்படும் பணம் ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடத்தல் நடவடிக்கைளிலும் ஊழல்களிலும் ஈடுபடும் ஹஜ் முகவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட மாநாடு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாது நிறைவுற்றது. ஹஜ் சட்ட வரைபில் பல திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஹஜ் முகவர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.

எமது சமூகம், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் முரண்பாடுகளிலே காலத்தை வீணடிக்கின்றது. முஸ்லிம் தனியார் சட்டம்  இதற்கு சிறந்ததோர் உதாரணம். முஸ்லிம் தனியார் சட்டம் போல் செயற்பாடுகள் நத்தை வேகத்தில் நகராது, ஹஜ் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஹஜ் சட்டத்துக்கான சமூக நலன் கருதிய வரைபொன்றினை வடிவமைத்துக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைந்து செயற்படவேண்டும். அடுத்த வருடம் முதல் எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகள் புதிய ஹஜ் சட்டத்தின்படியே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும்.

Leave A Reply

Your email address will not be published.