இலங்கையில் நாத்திகக் கொள்கையை மாணவர்களிடையே புகுத்த முயற்சி
உலமா சபையின் பத்வா குழு இணைப்பாளர் மின்ஹாஜ் முப்தி
சில கல்விநிலையங்களினூடாக இலங்கையில் மதசார்பற்ற நாத்திகக் கொள்கையை மாணவர்களிடையே புகுத்துவதற்கு புத்திஜீவிகள் எனக்கூறிக்கொள்ளும் சிலர் முற்படுகின்றனர். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அத்தடன் இளைஞர்களை அதனுள் உள்வாங்க அனுமதிக்க முடியாது என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபையின் பத்வா- குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் முப்தி கூறினார்.
இரத்தினபுரி ஜென்னத் ஜும்ஆ பள்ளிவாசலில் இயங்கும் மக்தப் பிரிவின் (அறநெறிப்பாடசாலையின்) வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றுமுன்தினம் மாலை ஜென்னத் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
ஜென்னத் ஜும்ஆ பள்ளிவாசலின் நிருவாகசபையின் தலைவர் மொகமட் இப்ராஹிம், பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.மில்ஹான் (அதிபர்), உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,
இன்றைய நவீன மயமாக்கலில் இளைஞர்கள் சமயங்களுக்கு அப்பால் செல்கின்றனர். இதனை தடுத்துநிறுத்தி அவர்களை நல்வழிப்படுத்த சமயங்கள் உதவிபுரியும். சமய போதனைகளை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு புகட்டவேண்டும்.
பெற்றோர்கள் முறையாக தமது பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்காவிட்டால் பின்னர் அவர்களுக்காக கண்ணீர் விட்டு அழவேண்டியேற்படும். பிள்ளைகளை முறையாக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெண்களை அதாவது தாய்மார்களை சாரும். கூடுதல் நேரம் தமதுபிள்ளைகளுடன் தாய்மார்கள் இருப்பதனால் அவர்கள் நல்வழிப்படுத்தும் முறைகளை பிள்ளைகளுக்கு அறிவூட்டவேண்டும்.
நாம் நமது பிள்ளைகளை பொறியியலாளர்களாக, வைத்தியர்களாக, உயரதிகாரிகளாக வளர்க்க நினைக்கின்றோம். அதே போல் மார்க்கப் பற்றுள்ளவர்களாக வளர்க்கவேண்டும். அத்துடன் பெற்றோர்கள் தமதுபிள்ளைகளுக்காக கூடுதலான பிரார்த்தனைகள் (துஆ) செய்யவேண்டும்.
சமயத்தை முறையாக கடைப்பிடிப்பவர்கள் மற்றும் மார்க்க அறிவை பெற்றவர்கள் உலகிலுள்ள எந்தவொரு சவால்களுக்கும் முகங்கொடுத்து வெற்றிகொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். எனவே பெற்றோர்கள் பண்பாடு, மதம், மொழி, கலாசாரம், கல்வி, நடத்தை என்பனவற்றில் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். நாம் முன்மாதிரியாக இல்லாமல் நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டால் நமது பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள்.
இன்று சிறைவாசம் அனுபவிப்பவர்களில் கூடுதலானவர்கள் இளைஞர்களாக இருக்கின்றனர். குறிப்பாக 11 வயது தொடக்கம் 25 வயதானவர்களே உள்ளனர். இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேற்கொண்ட ஆய்விலிருந்து அறிந்து கொண்டோம். இதனைவிட கூடுதலான இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் நுர்நடத்தை உள்ளவாகளாக உள்ளனர். எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் இவ்வாறு தீய பழக்க வழக்கங்களுக்கு உட்படக்கூடாது என்பதற்காக இதனை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைபள்ளிவாசல்கள் தோறும் மக்தப் பிரிவுகளை உருவாக்கி சமய போதனைகளை மாணவர்களுக்கு புகட்டிவருகின்றது. என்றார்.
-Vidivelli