பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் ஊழல் புரிந்தமைக்காக ஏழு வருட சிறைத் தண்டனை தொடர்பில் மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டினை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றமொன்று நிராகரித்துள்ளது.
மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் கடந்த வாரம் முடிவடைந்ததையடுத்து இஸ்லாமாபாத்தின் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட குழு தனது தீர்ப்பினை அறிவித்தது. முன்னாள் பிரதமரின் அணி குறித்த வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாக ஷரீபின் உதவியாளரான ஷாஹிட் அப்பாஸி தெரிவித்தார்.
வைத்தியசாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஷரீப் தனது இருதய நோய்க்கான சிகிச்சையினைப் பெற்று வருகின்றார்.
ஷரீபின் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து கடந்த 2017 ஜுலை மாதம் ஷரீப் பிரதமராக பதவி வகிக்கத் தகுதியில்லாதவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊழலுக்கு எதிரான நீதிமன்றம் கடந்த வருடம் மற்றுமொரு ஊழல் வழக்கில் 10 வருட சிறைத் தண்டனை விதித்தது. மேன் முறையீட்டின் காரணமாக குறித்த தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-Vidivelli