புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானது
நாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்கிறது ம.வி.மு.
பயங்கரவாத தடைச்சட்டத்தையும்விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானதாகும். இதன்மூலம் அரசாங்கத்துக்கு எதிராக எழக்கூடிய அனைத்து சக்திகளையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் யுத்தம் இல்லை. அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். 1978ஆம் ஆண்டு இந்த சட்டத்தை கொண்டுவரும்போது தற்காலிகமாக என்று தெரிவித்தே இது கொண்டுவரப்பட்டது. ஆனால் பின்னர் நிலையான சட்டமாக இருந்து வந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம், பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தி அமைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதியளித்திருந்தது. அதனடிப்படையிலே தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்று புதிய சட்டமொன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த சட்டமூலமானது பயங்கரவாத தடைச்சட்டத்தையும் பார்க்க பயங்கரமானதாகும். பயங்கரவாதம் தொடர்பில் இந்த சட்டமூலத்தில் பல அத்தியாயங்களில் அர்த்தம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்கங்களுக்கு கூட வீதிக்கு இறங்கமுடியாத நிலை ஏற்படும்.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் பாதுகாப்பு அமைச்சுக்கு கீழே இருந்து வருகின்றது. ஆனால் தற்போது இந்தப் புதிய சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சே கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகின்றது. அரசாங்கத்துக்கு எதிராக செயற்படக்கூடிய அனைத்து போராட்டங்களையும் அடக்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டால் எமது எதிர்பை தெரிவிப்போம் என்றார்.
-Vidivelli