பாகிஸ்தானின் பால்கோட் பிரதேசத்தில் காணப்படுவதாக கூறப்படும் தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடாத்தியதனை வலுவாக நிராகரித்த பாகிஸ்தானிய தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா அவசியமில்லாத வன்முறையொன்றிலே ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான தக்க பதிலடி சரியான தருணத்தில் தங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற பிரதேசத்திலே வழங்கப்படுமெனவும் கூறியுள்ளது.
பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பிலே பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், கூட்டுப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி, இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய சிவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், பாகிஸ்தானிய பிரதமர் தலைமையில் தேசிய கட்டளை ஆணையத்துடனான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
ஆயுதப் படைகள் மற்றும் மக்கள் உட்பட அனைத்து தேசிய சக்திகளையும் நிகழக்கூடிய எவ்விதமான சம்பவத்திற்கும் தயாராகவிருக்குமாறு பாகிஸ்தானிய பிரதமர் இதன்பொழுது அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியாகிய அறிக்கையானது இந்திய இராணுவம் பல்ககொட் பிரதேசத்தில் நடாத்தியதாக கூறப்படும் தாக்குதலினை வலுவாக நிராகரித்தது.
இந்திய இராணுவம் மீண்டுமொருமுறை பொறுப்பற்ற மற்றும் கற்பனையான தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ளது. இந்நடவடிக்கையானது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தினை சேர்க்கும் தேர்தல் காலத்திற்கான நடவடிக்கையென அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தினால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படும் பிரதேசங்களை எவ்வித தடங்கலுமின்றி அனைவரும் பார்வையிடலாம் எனவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் உண்மையினை நேரிலே கண்டறிய அப்பிரதேசத்திற்கு அழைத்து செல்லப்படுவர் எனவும் தேசிய பாதுகாப்புக்குழு தெரிவித்தது.
இந்தியப் படைகளின் முயற்சியினை தகுந்த நேரத்தில் எவ்வித உயிர் மற்றும் உடைமை அழிவில்லாமல் திசைதிருப்பிய பாகிஸ்தான் விமானப்படையினரை இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டினார்.
-Vidivelli