பயங்கரவாதம் எனும் பீடையுடன் போராடுவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியாகவும் மற்றும் தீர்மானமிக்க வகையிலும் அனைத்து அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பற்றுறுதி கொண்டுள்ளதென வெளியுறவுத்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பல்கோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-இ-மொஹம்மட் பயிற்சி முகாம்கள் மீது நடத்திய வான் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரெவரி 14, 2019 அன்று, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக்குழு ஜெய்ஷ்–-இ–-மொஹமட் நடத்திய ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சென்ரல் ரிசர்வ் பொலிஸ் படையணியைச் சேர்ந்த 40 வீரர்கள் பலியாகினர். பஹாவல்பூரை அதன் தலைமை அலுவலகமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-மொஹமட் மசூட் அசாரினால் தலைமை தாங்கப்பட்டு கடந்த இரு தசாப்தங்களாக பாகிஸ்தானில் செயற்பட்டு வருகிறது.
இந்த இயக்கம், ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டதென்பதுடன், 2001 டிசம்பரில் இந்தியப் பாராளுமன்றம் மற்றும் 2016 ஜனவரியில் பத்தன்கோட் விமானத்தளத்தின் மீதான தாக்குதல் உட்பட, ஒரு தொடரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானதாகும்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளிலுள்ள பயிற்சி முகாம்களின் அமைவிடம் பற்றிய தகவல்கள் காலத்திற்கு காலம் பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்டு வந்தது. என்றாலும், பாகிஸ்தான் அப்பயங்கரவாத முகாம்களின் இருப்பை மறுத்தே வந்துள்ளது. பல நூற்றுக் கணக்கான ஜிஹாதிகளைப் பயிற்றுவிப்பதற்கான பெரும் பயிற்சி வசதிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமல் அந்நாட்டில் செயற்பட்டிருக்க முடியாது.
ஜிஹாதிகள் பாகிஸ்தானினுள் பயிற்றுவிக்கப்படுவதையும் ஆயுதம் பெறுவதையும் தடைசெய்வதற்கு ஏற்ப ஜெய்ஷ்-–இ-–மொஹம்மட்டிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா, பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தது. பாகிஸ்தான் அதன் மண்ணில், பயங்கரவாதத்தின் உட்கட்டமைப்புகளை இல்லாதொழிப்பதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஜெய்ஷ்-–இ-–மொஹம்மட் மற்றுமொரு தற்கொலை பயங்கரவாதத் தாக்குதலை நாட்டின் பல்வேறு பாகங்களில் நடத்த எத்தனிப்பதாகவும் இந்த நோக்கத்திற்காக பிடாயின் ஜிஹாதிகளை பயிற்றுவிப்பதாகவும், நம்பகமான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அப்படியான தாக்குதல்களுக்கான சாத்தியத்தின் பின்னணியில், ஒரு தற்காப்பு ரீதியிலான தாக்குதல் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டது.
இன்று (நேற்று) அதிகாலை நேரத்தில், புலனாய்வுத் தகவல் அடிப்படையிலான ஒரு நடவடிக்கையில், இந்தியா பாகிஸ்தானின் பல்தொட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-–இ–-மொஹம்மட்டின் மிகப் பெரிய பயிற்சி முகாம் மீது தாக்குதலை நடாத்தியது. இந்த நடவடிக்கையில், ஜெயஷ்-இ-மொஹம்மட் இயக்கத்தைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள், பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட கட்டளை ஸ்தானத்திலுள்ளோர்கள் மற்றும் பயங்கரவாதிகளாகப் பயிற்றுவிக்கப்படும் பல ஜிஹாதி குழுக்கள் அழிக்கப்பட்டன. இந்த முகாமின் பொறுப்பாளர் ஜெய்ஷ்–-இ–-மொஹம்மடின் தலைவர் மசூட் அசாரின் மைத்துனரான மௌலான யூசூப் அசார் (அல்லது உஸ்தாத் கோரி) ஆவார்.
பயங்கரவாதம் எனும் பீடையுடன் போராடுவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியாகவும் மற்றும் தீர்மானமிக்க வகையிலும் அனைத்து அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பற்றுறுதி கொண்டுள்ளது. எனவே, இந்த இராணுவ ரீதியிலானதல்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கை விசேடமாக ஜெய்ஷ்-–இ–-மொஹம்மட் முகாமை இலக்காகக் கொண்டதாகும். தாக்குதல் இலக்கு பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்டது. இந்த முகாம் பொதுமக்கள் இல்லாத ஒரு மலைமுகட்டின் மீதாக அடர்ந்த காட்டில் அமைந்திருந்தது. வான் தாக்குதல், சற்று நேரத்திற்கு முன்பு தான் நடாத்தப்பட்டதென்பதால், மேலதிக தகவல்களுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்திற்காக அதன் கட்டுப்பாட்டிலுள்ள மண்ணை உபயோகிப்பதில்லை என பாக்கிஸ்தானிய அரசாங்கம் 2004 இல் உறுதியான பற்றுறுதி அளித்திருந்தது. பாகிஸ்தான் பகிரங்கமாக மேற்கொண்ட அதன் பற்றுறுதிக்கு அமைவாக நடப்பதற்கும் மற்றும் ஜெய்ஷ்–-இ-–மொஹம்மட் மற்றும் ஏனைய பயங்கரவாதக் குழுக்களின் முகாம்களை கலைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் பயங்கரவாதிகளை அவர்களது நடவடிக்கைகளுக்காக பொறுப்புக் கூற வைக்குமெனவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பிலே பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், கூட்டுப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி, இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய சிவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், பாகிஸ்தானிய பிரதமர் தலைமையில் தேசிய கட்டளை ஆணையத்துடனான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
ஆயுதப் படைகள் மற்றும் மக்கள் உட்பட அனைத்து தேசிய சக்திகளையும் நிகழக்கூடிய எவ்விதமான சம்பவத்திற்கும் தயாராகவிருக்குமாறு பாகிஸ்தானிய பிரதமர் இதன்பொழுது அறிவுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியாகிய அறிக்கையானது இந்திய இராணுவம் பால்கொட் பிரதேசத்தில் நடாத்தியதாக கூறப்படும் தாக்குதலினை வலுவாக நிராகரித்தது.
இந்திய இராணுவம் மீண்டுமொருமுறை பொறுப்பற்ற மற்றும் கற்பனையான தாக்குதலிற்கு உரிமைகோரியுள்ளது. இந்நடவடிக்கையானது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தினை சேர்க்கும் தேர்தல் காலத்திற்கான நடவடிக்கையென அவ்வறிக்கையில் கையானது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தினை சேர்க்கும் தேர்தல் காலத்திற்கான நடவடிக்கையென அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தினால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படும் பிரதேசங்களை எவ்வித தடங்கலுமின்றி அனைவரும் பார்வையிடலாம் எனவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் உண்மையினை நேரிலே கண்டறிய அப்பிரதேசத்திற்கு அழைத்து செல்லப்படுவர் எனவும் தேசிய பாதுகாப்புக்குழு தெரிவித்தது.
இந்தியப் படைகளின் முயற்சியினை தகுந்த நேரத்தில் எவ்வித உயிர் மற்றும் உடைமை அழிவில்லாமல் திசைதிருப்பிய பாகிஸ்தான் விமானப்படையினரை இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டினார்.